கடந்த 10 மாதங்களில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 60,000 கோடி ரூபாய் அளவிற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் அடுத்த வெளிநாட்டுப் பயணம் எது என்பது குறித்த தகவலை தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ளார்.
துபாய்க்கு சென்ற முதல்வர்
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அண்பையில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முதலில் துபாய்க்கு சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலின், பின்னர் அபுதாபிக்கும் சென்றார். துபாயில் நடைபெற்ற உலக தொழில் கண்காட்சியிலும் ஸ்டாலின் பங்கேற்றார். இந்த சுற்றுப் பயணத்தின்போது தமிழகத்தில் ரூ. 6,100 கோடி மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இந்த ஒப்பந்தங்கள் மூலம் தமிழகத்தில் சுமார் 14,700 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், முதல்வர் மு.க. ஸ்டாலினின் இந்த வெளிநாட்டுப் பயணத்தை அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பல நாடுகளில் இருந்தும் அழைப்புகள் வருவதாக தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேட்டி அளித்துள்ள தங்கம் தென்னரசு, “கடந்த 2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் அந்நிய நேரடி முதலீடு 41 சதவீதம் அதிகரித்திருப்பதாக ஒன்றிய அரசின் புள்ளிவிவரம் கூறுகிறது. ஆனால், கடந்த 10 மாதங்களில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 60,000 கோடி ரூபாய் அளவிற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் இரண்டு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளன.
அமெரிக்கா, தென் கொரியா அழைப்பு
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அமெரிக்கா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளும் அழைப்பு விடுத்துள்ளன. துபாய், அபுதாபி பயணங்களைத் தொடர்ந்து தேவையையும் கால சூழ்நிலையையும் பொறுத்து அந்த வாய்ப்புகளை தமிழக தொழில் துறை பயன்படுத்தும். முதல்வரின் அடுத்த கட்ட வெளி நாட்டுப் பயணம் தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்” என்று தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.