வேகமெடுக்கும் கூட்டணி பேச்சுவார்த்தை..! அதிமுக – பாமக தொகுதி பேர பின்னணி..!

By Selva KathirFirst Published Jan 11, 2021, 10:43 AM IST
Highlights

கசப்புகளை மறந்து தொகுதிப் பங்கீடு தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் பேச்சுவார்த்தை நடந்த முன்வந்திருப்பது அதிமுகவை உற்சாகப்படுத்தியுள்ளது.

கசப்புகளை மறந்து தொகுதிப் பங்கீடு தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் பேச்சுவார்த்தை நடந்த முன்வந்திருப்பது அதிமுகவை உற்சாகப்படுத்தியுள்ளது.

கடந்த 6 மாதங்களுக்கு மேலாக கூட்டணி விஷயத்தில் பிடிகொடுக்காமல் இருந்து வந்தார் பாமக நிறுவனர் ராமதாஸ். ஆனால் இதை எல்லாம் பொருட்படுத்தாமல் பாமக அதிமுக கூட்டணியில் தான் உள்ளது என்று உறுதியுடனும் நம்பிக்கையுடனும் கூறி வந்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இந்த நிலையில் தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கு ஏற்ப பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க ராமதாஸ் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர்கள் தங்கமணி, கே.பி.அன்பழகன் தைலாபுரம் சென்று ராமதாசை சந்தித்து பேசினர்.

அப்போது தொகுதிப் பங்கீடு என்பதை தாண்டி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசு சாதகமான முடிவு எடுக்க வேண்டும் என்பதை ராமதாஸ் வலியுறுத்தியிருந்தார். வெறும் தொகுதிகளின் எண்ணிக்கை, பணம் மட்டுமே இந்த முறை வட மாவட்டங்களில் வெற்றி தோல்வியை தீர்மானித்துவிடாது, திமுகவின் தேர்தல் வியூகத்தை முறியடிக்க வேண்டும் என்றால் நிச்சயம் இடஒதுக்கீடு விவகாரத்தில் வன்னியர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்று ராமதாஸ் அமைச்சர்களிடம் கூறி அனுப்பியிருந்தார்.

இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் அதிமுக முக்கிய பிரமுகர்கள் கடந்த சில நாட்களாகவே ஆலோசனை நடத்தி வந்தனர். அப்போது தான் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்ததாக வதந்தி பரவியது. ஆனால் உண்மையில் தனி இடஒதுக்கீடு விவகாரத்தில் வன்னியர்களுக்கு மட்டும் அல்லாமல் மற்ற பெரும்பான்மை சமுதாயங்களையும் சேர்க்க வேண்டும் என்றே ஓபிஎஸ் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியானது. அதோடு மட்டும் அல்லாமல் ராமதாஸின் கோரிக்கையை பரிசீலிப்பது குறித்தும் உயர்மட்ட அளவில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தான் பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக நிச்சயம் சாதகமான முடிவை எடுக்கும் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில் கூட்டணி அமைப்பதாக கூறி இந்த பேச்சுவார்த்தையை பாமக முன்னெடுத்துள்ளது. ஏற்கனவே ஒரு கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. சுமார் 60 தொகுதிகள் வரை பாமக சார்பில் அதிமுகவிடம் கோரப்பட்டுள்ளது. ஆனால் அவ்வளவு தர முடியாது என்று கூறி 41 தொகுதிகள் வரை ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாக கூறுகிறார்கள்.

ஆனால் பாமக 50 தொகுதிகளுக்கும் அதிகமான தொகுதிகளை எதிர்பார்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை மனதில் வைத்து 55 தொகுதிகள் என்று பாமக தரப்பில் கடைசியாக அதிமுகவிற்கு தகவல் அனுப்பியுள்ளதாக சொல்கிறார்கள். அதே சமயம் 43 தொகுதிகள் வரை அதிமுகவும் இறங்கி வந்திருப்பதாக சொல்கிறார்கள். அடுத்ததாக பாமக முக்கிய நிர்வாகிகள் விரைவில் அதிமுக நிர்வாகிகளை சந்திக்க உள்ளனர். இந்த பேச்சுவார்த்தையின் போது தொகுதிப் பங்கீட்டில் அடுத்த கட்ட நகர்வு இருக்கும் என்கிறார்கள். இறுதியாக முதலமைச்சர் ஓபிஎஸ், துணை முதலமைச்சர் இபிஎஸ்சை சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பாமக நிறுவனர் ராமதாஸ் சந்திப்பார் என்கிறார்கள்.

பொங்கல் பண்டிகையை ஒட்டி இந்த சந்திப்பு நடைபெறும் என்றும் அப்போது அதிமுக – பாமக கூட்டணி உறுதி என்கிற தகவல் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பாமகவிற்கு அதிகபட்சமாக 51 தொகுதிகளை கூட அதிமுக வழங்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். பாஜக கூட்டணியை உறுதிப்படுத்த தயாராக இல்லாத நிலையில் தற்போது கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளை தக்க வைத்துக் கொள்வதில் தான் அதிமுக கவனம் செலுத்தும் என்றும் எனவே பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் அதிக தொகுதிகளை பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

click me!