
சரியான தலைமை இல்லாததால் அதிமுக தடுமாறுகிறது என்றும், மத்திய அரசோடு சேர்ந்து அவர்களின் செயல்களுக்கெல்லாம் தமிழக அரசு துணைபோவது மக்களுக்கு செய்யும் துரோகம் என்று தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
காவிரி உரிமை மீட்பு நடைப்பயணத்திற்கான இரண்டாவது குழு இன்று அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் பேருந்து நிலையத்தில் இருந்து துவங்கியது. இந்த நடைபயணத்தில், திமுகவின் ஆ.ராசா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இடம் பெற்றுள்ளனர்.
அப்போது பேசிய தொல்.திருமாவளவன், காவிரி நீருக்கான உரிமைப்போர் நடந்து வரும் வேளையில் அதை திசை திருப்பும் விதமாக நடக்கும் ஐபிஎல் போட்டிகள் நடத்துவதா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
நாங்கள் ஐபிஎல் போட்டிக்கு எதிரானவர்கள் இல்லை. இந்த நேரத்தில் நடத்த வேண்டாம். அப்படியே நடத்தினாலும் வேறு மாநிலத்தில் நடத்துங்கள் என்றுதான் கோரிக்கை வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் மோடி, சென்னை வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என்று எதிர்கட்சிகள் அறிவித்து இருக்கும் நிலையில், அதற்கு பதில் பச்சைக்கொடி காட்டுவோம் என்று ஒரு அமைச்சர் பேசி இருப்பது வேடிக்கையானது என்றார்.
அதிமுகவை வழிநடத்த தகுதியான தலைவர்கள் இல்லாததே இதுபோன்ற பேச்சுகளுக்க காரணம். ஜெயலலிதா இல்லாதது மிகவும் வருத்தமளிக்கிறது என்றும் திருமாவளவன் குறிப்பிட்டார்.
மத்திய அரசோடு சேர்ந்து அவர்களின் செயல்களுக்கெல்லாம் தமிழக அரசு துணை போவது மக்களுக்கு செய்யும் துரோகம் என்றும் தொல்.திருமாவளவன் கூறினார்.