
திமுக அரசின் கோபத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள டெல்லி சென்று சில முக்கிய நபர்களை சந்தித்த ராஜேந்திர பாலாஜிக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்கிறார்கள்.
கடந்த அதிமுக ஆட்சியின் போது எதிர்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் அதிமுகவின் இரண்டு அமைச்சர்களைத்தான் மிகுந்த கோபத்துடன் விமர்சித்து வந்தார். அவர்களில் ஒருவர் தான் ராஜேந்திர பாலாஜி. திமுக ஆட்சிக்கு வந்த உடன் ராஜேந்திர பாலாஜி சிறைக்கு செல்வார் என்று விருதுநகரில் ஸ்டாலின் பேச, தாங்கள் நினைத்தால் தற்போதே ஸ்டாலின் குடும்பத்தையே புழல் சிறையில் அடைக்க முடியும் என்று ராஜேந்திர பாலாஜி பதிலடி கொடுத்தார். அத்துடன் ஒண்டிக்கு ஒண்டி வர்றியா என ஸ்டாலினுக்கு சவால் விடுத்தார் ராஜேந்திர பாலாஜி. அப்போது முதல் ராஜேந்திர பாலாஜியை பெயர் சொல்லாமல் கோமாளி என்று அழைப்பதை வாடிக்கையாக்கிக் கொண்டார் ஸ்டாலின்.
இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே ஸ்டாலினை பாராட்டி பேட்டி கொடுத்தார் ராஜேந்திர பாலாஜி. அத்துடன் தான் தற்போது பக்குவப்பட்டுவிட்டதாகவும் இனி அதிரடி அரசியல் செய்யப்போவதில்லை என்றும் ஒரு அறிக்கை வெளியிட்டார். இதன் மூலம் தன் மீதான ஆளும் அரசின் கோபம் குறையும் என்று ராஜேந்திர பாலாஜி எதிர்பார்த்தார். ஆனால் ஆவின் நிறுவனத்தில் கடந்த 5 வருடங்களாக நடைபெற்ற முறைகேடுகளை அதிகாரிகள் தோண்டி எடுத்து வருகின்றனர். முறைகேட்டில் ஈடுபட்டதாக முக்கிய அதிகாரிகள் பலர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே சுமார் 100 கோடி ரூபாய் அளவிற்கு ஆவினில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. போதாக்குறைக்கு ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு புகார்களை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த பரபரப்பான சூழலில் தான் ராஜேந்திர பாலாஜி டெல்லி புறப்பட்டுச் சென்றார். வழக்குகளில் இருந்து தப்பிக்க தற்போதைக்கு ராஜேந்திர பாலாஜி அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் ஐக்கியமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அடுத்த நாளே அந்த தகவலை எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்தார்.
ஆனாலும் கூட தற்போதும் டெல்லியிலேயே ராஜேந்திர பாலாஜி முகாமிட்டுள்ளார். இதற்கிடையே மூத்த வழக்கறிஞர்கள் சிலருடன் ஆலோசனை நடத்திய நிலையில் பாஜக முக்கிய பிரமுகர்கள் சிலரையும் அவர் சந்தித்து பேசியுள்ளார். அது கட்சியில் சேர இல்லை என்றாலும் கூட தனக்கு பாதுகாப்பாக இருக்க உதவுமாறு சில கோரிக்கைகளை ராஜேந்திர பாலாஜி முன் வைத்ததாக சொல்கிறார்கள். ஆனால் பாஜக தரப்பில் இருந்து சாதகமான எந்த சிக்னலும் ராஜேந்திர பாலாஜிக்கு கிடைக்கவில்லை என்கிறார்கள். இதனிடையே, எம்ஆர் விஜயபாஸ்கர், எஸ்பி வேலுமணியை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி தொடர்புடைய பைல்களை லஞ்ச ஒழிப்புத்துறை தூசி தட்டியுள்ளதாக சொல்கிறார்கள்.
விஜயபாஸ்கர், வேலுமணி பெரிய அளவில் சிக்கல் இல்லாமல் தப்பிய நிலையில் ராஜேந்திர பாலாஜியை எப்படியும் லாக் செய்ய வேண்டும் என்கிற மும்முரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தயாராகி வருகிறது.