அ.தி.மு.க ஆட்சியில் ஆவினில் முறைகேடு... ஒரே வாரத்தில் விசாரணை அறிக்கை... அமைச்சர் நாசர் உறுதி!

By Thiraviaraj RMFirst Published Jul 1, 2021, 5:14 PM IST
Highlights

 அ.தி.மு.க ஆட்சியில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் முறைகேடாக பணி நியமனம் நடைபெற்றுள்ளதாக ஆவின் நிர்வாகத்திற்கு புகார்கள் சென்றன.

அ.தி.மு.க ஆட்சியில் ஆவினில் நடைபெற்ற முறைகேடான பணி நியமனங்கள் குறித்து விசாரணை நடத்தி ஒரு வாரத்தில் முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் முறைகேடாக பணி நியமனம் நடைபெற்றுள்ளதாக ஆவின் நிர்வாகத்திற்கு புகார்கள் சென்றன. தி.மு.க அரசு பொறுப்பேற்ற இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டது.

ஆவின் பணி நியமனத்தில் முறைகேடுகளும், நிர்வாக குளறுபடிகளும் நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்த நிலையில் பணி நியமனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அ.தி.மு.க ஆட்சியில் ஆவினில் நடைபெற்ற முறைகேடான பணி நியமனங்கள் குறித்து விசாரணை நடத்தி ஒரு வாரத்தில் முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

ஆவின் நிறுவனம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் ஆய்வு மேற்கொண்ட பால்வளத்துறை அமைச்சர் நாசர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழகத்தில் மதுரை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பூர், நாமக்கல், திருச்சி, தேனி, விருதுநகர், தஞ்சாவூர் மாவட்டங்கள், மாவட்ட இணையம் ஆகியவற்றில் உள்ள ஆவின் ஒன்றியங்களில் முறைகேடாக 236 பணி நியமனங்கள் நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இவைதவிர 176 முதுநிலை உதவியாளர்கள் இடங்கள், 138 தொழில்நுட்ப பணியிடங்கள் நிரப்புவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பணி நியமனங்கள் தொடர்பான புகார்கள் மீது விசாரணை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

விசாரணை நடத்துவதற்கான ஆவணங்களை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிந்து அதன் அறிக்கை ஒரு வாரத்துக்குள் முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும். சாக்லேட், பிஸ்கட், பால் பவுடர் உள்ளிட்ட 152 பொருட்களை துபாய், கத்தார், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்டநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினசரி பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், கூடுதலாக தற்போது 1.5 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் சென்னையில் தினசரி 12 லட்சம் லிட்டராக இருந்த ஆவின் பால் விற்பனை, 14 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
 

click me!