
கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சருடன், இளம் பெண் ஒருவர் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நுழைந்து சாமி தரிசனம் செய்தது போன்ற புகைப்படம் வெளியாகி சர்ச்சையாகி உள்ளது. 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நுழைய தடை இருக்கும்நிலையில், இளம் நுழைந்தது குறித்து விசாரணை நடத்த இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
அமைச்சருடன் இளம் பெண்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜாவுடன், 50 வயதுக்கும் குறைவான பெண் ஒருவரும் நுழைந்து சாமி தரிசனம் செய்த புகைப்படம், வீடியோ வெளியானது. அந்தபெண் மஞ்சள்நிற சேலைஅணிந்து, அமைச்சர் அருகில் நின்று இருந்து, கையில் கோயிலின் பிரசாதத்தை கையில் ஏந்தியவாறு அந்த புகைப்படத்தில் இருந்தது. இவர்களுடன் கோயிலின் ஊழியர்களும் இருந்தனர்.
சர்ச்சை
இந்த புகைப்படம் மற்றும் வீடியோ வெளியானதில் இருந்து இந்து அமைப்புகள் போர்க்கொடி தூக்கத் தொடங்கியுள்ளன. கோயிலின் புனிதத்தன்மையை மீறப்பட்டதற்கு திருவாங்கூர் தேவஸ்தான வாரியமே பொறுப்பு என்றும், 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் கோயிலுக்குள் நுழைய தடை இருக்கும் நிலையில், இவ்வாறு அனுமதித்தது விதிமுறை மீறல் என இந்து ஐக்கிய வேதி அமைப்பு தெரிவித்துள்ளது.
மதிப்பு அளிக்க வேண்டும்
இது குறித்து இந்து வேதி அமைப்பின் செயலாளர் பார்கவராம் கூறுகையில், “ நடைமுறையில் இருக்கும் விதிமுறையை அப்பட்டமாக மீறி இருப்பது தெரிகிறது. அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலை கோயிலுக்குள் நுழைந்து தரிசனம் செய்யலாம் என அரசு விரும்புகிறது. ஆனால், அது குறித்து நீதிமன்றம் இன்னும் அறிவிக்கவில்லை. ஆதலால், ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் சட்டத்துக்கு அரசு மதிப்பளிக்க வேண்டும். தனிப்பட்ட அரசியல் கட்சியின் நிலைப்பாடு என்பது வேறுமாதிரி இருக்கலாம்’’ என்று தெரிவித்தார்.
விசாரணை
இதற்கிடையே திருவாங்கூர் தேவஸம் வாரிய அதிகாரி ஏ. பத்மகுமார் கூறுகையில், “ அமைச்சருடன் வந்த பெண் சுகாதாரத்துறை அதிகாரி, இந்த குற்றச்சாட்டு விரிவாக விசாரணை நடத்தி 2 நாட்களில் விளக்கம் அளிக்கப்படும்’’ எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே சபரிமலையில் பெண்கள் நுழைந்து சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை மீறியது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது அரசியல் சாசன அமர்வு முன் விசாரணையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயமலா விவகாரம்
இதற்கு முன் 2006ம் ஆண்டு கன்னட நடிகை ஜெயமாலா மூலம் சர்ச்சை உருவானது. கடந்த 1986ம் ஆண்டு தன்னுடைய 27-வது வயதில் தனது கணவருடன் சபரிமலைக்கு வந்தபோது, சபரிமலை ஐயப்பன் கோயில் சிலையை தொட்டதாக கூறி அது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.