18 படி ஏறி அய்யப்பனை தரிசித்த 46 வயதுப் பெண்…சபரிமலையில் மீண்டும் சர்ச்சை !!

By Selvanayagam PFirst Published Jan 4, 2019, 11:20 AM IST
Highlights

சபரிமலையில் 50 வதுக்குட்பட்ட இரய்டு பெண்கள் நேற்று முன்தினம் போலீஸ் பாதுகாப்புடம் அய்யப்பனை தரிசனம் செய்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நேற்று இரவு 46 வயதான இலங்கைப் பெண்  ஒருவர் 18 படி ஏறி சாமிதரிசனம் செய்தார்.

அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு சென்று தரிசிக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவிற்குப் பின்னர் கோவில் நடை திறக்கப்பட்டபோது, 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் பலர், சபரிமலைக்கு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், பக்தர்களின் கடும் எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக அவர்களால் செல்ல முடியவில்லை. 

இதற்கிடையே, நேற்று  முன்தினம் அதிகாலை கேரளாவைச் சேர்ந்த 50 வயதுக்குட்பட்ட 2 பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.  சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது.

இதுதொடர்பாக, கேரளாவில் அநற்று  முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.மாநிலம் முழுவதும் இந்து அமைப்பினர் வன்முறையில் ஈடுபட்டனர்.

இந்த இக்கட்டான நிலையில் நேற்று இரவு 9.30 மணி அளவில் சபரிமலைக்கு இலங்கையைச் சேர்ந்த 46 வயது பெண் ஒருவர் 18 படிகள் வழியாக ஏறி ஐயப்பனைத் தரிசனம் செய்து திரும்பியுள்ளார். அவருக்கு போலீஸார் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளனர்.

அந்தப் பெண்ணின் பெயர் சசிகலா என்பதும், அவரின் தந்தை பெயர் அசோக் குமரன் என்றும் போலீஸார் தெரிவித்தனர். அந்தப் பெண்ணிடம் இலங்கை பாஸ்போர்ட் இருந்தது என்றும், அந்த பாஸ்போர்ட்டில் அந்தப் பெண்ணின் பிறந்த தேதி 1972, டிசம்பர் 3-ம் தேதி என்று குறிப்பிடப்பட்டு இருந்தது என்று போலீஸார் தெரிவித்தனர்.

இலங்கையைச் சேர்ந்த சசிகலா என்ற 46 வயது பெண், சபரிமலை ஐயப்பனைத் தரிசிக்க ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருந்தார். தான் சபரிமலை ஐயப்பனைத் தரிசிக்க வேண்டும் என்றும் அதற்கு போதுமான பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதைத் தொடர்ந்து அவருடன் போலீஸார் உடன் சென்றனர். ஐயப்பன் கோயிலில் விஐபி செல்லும் பாதை வழியாகச் செல்லாமல் 18 படிகள் மீது ஏறிச்சென்று இரவு 9.30 மணிஅளவில் சசிகலா ஐயப்பனை தரிசனம் செய்தார். பின்னர் தரிசனத்தை முடித்துவிட்டு இரவு 11 மணிக்கு பம்பைக்குப் பாதுகாப்பாக வந்து சேர்ந்தார். ஏற்கெனவே முன்பதிவு செய்துவிட்டதால், அவருக்கு உரிய பாதுகாப்பு அளித்தோம் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும், சசிகலாவுக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளித்த போலீஸ் அதிகாரிகள், பெண் போலீஸார் சாதாரண உடையில் சென்றனர். 18 படிகள் வழியாக செல்லும் பக்தர்கள், ஒரு மண்டலம் விரதம் இருந்து மாலை அணிந்தவர்கள் மட்டுமே செல்ல முடியும் என்று கூறப்படும் நிலையில், தற்போது இலங்கைப் பெண் 18 படிஏறி சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

click me!