ஸ்டாலினுக்கும் செந்தில்பாலாஜிக்கும் இடையில் ‘ரியல் எஸ்டேட்’ மோதல்: கரூர் தி.மு.க.வில் கட்டங்கட்டப்படும் எம்.எல்.ஏ.

By Vishnu PriyaFirst Published Sep 15, 2019, 3:02 PM IST
Highlights

இது சாத்தியமா? இதை நம்பி மக்கள் ஓட்டுப்போட்டு, ஜெயிச்ச பிறகு நீ வாக்கை நிறைவேத்தலேன்னா நம்ம கட்சியோட பேரு கெட்டுடுமே தம்பி.’ என்றார். ஆனால் செந்தில்பாலாஜியோ சில ஏக்கர் நிலங்களைன் டாகுமெண்டுகளை காட்டி, நிச்சயம் இதை பிரிச்சு கொடுப்பேன் ஏழை மக்களுக்கு! என்றார். ஸ்டாலினும் இதை நம்பி, உற்சாகமாக அந்த வாகுறுதியை வைத்து பிரசாரம் செய்தார்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து ஏக ஆரவாரமாக திராவிட முன்னேற்ற கழகத்தில் வந்து இணைந்தார் செந்தில்பாலாஜி. கொதித்துப் போனார் தினகரன் இந்த இழப்பை. தினகரனை சூடேற்ற வேண்டும் என்பதற்காக செந்திலை ஏக விமரிசையாக வரவேற்று, அரவணைத்தார் ஸ்டாலின். அதன் பின் சில ஆயிரம் பேரை அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க.விலிருந்து  கொண்டு வந்து ஸ்டாலின் முன்னிலையில் கரூர் கூட்டத்தில் இணைத்தார் செந்தில் பாலாஜி. அதன் பின் ஸ்டாலினுக்கு மிக மிக நெருக்கமான வட்டாரத்தில் செந்தில் பாலாஜியை காண முடிந்தது.

 

கரூரில் நடந்த மாதிரி ஊராட்சி சபை கூட்டத்தில் நேரு, ஐ.பெரியசாமி போன்றோரையெல்லாம் ஓவர் டேக் செய்து ஸ்டாலினின் அருகிலேயே அமர்ந்தார் பாலாஜி. கரூர் மாவட்ட கழக பொறுப்பாளரானார், அரவக்குறிச்சி வேட்பாளரானார், இவர் வெற்றிக்காக ஸ்டாலின்  ஆழமான பிரசாரத்தை செய்தார். இதற்கெல்லாம் நன்றிக்கடனாக தினகரன் கட்சியின் முக்கிய தலையான தங்கத்தமிழ் செல்வனை தி.மு.க.வில் கொண்டு வந்து இணைத்தார் செந்தில். ஆக தி.மு.க.வில் செந்தில்பாலாஜி பெருமையாய் கோலோச்சிக் கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் ஸ்டாலினுக்கும், இவருக்கும் இடையில் ரியல் எஸ்டேட் விவகாரத்தின் மூலம் பெரும் உரசல் உருவாகி இருக்கிறது! என்று வலுவான தகவல். 
என்னது ஸ்டாலின் ரியல் எஸ்டேட் பிஸ்னஸும் பண்றாரா? என்று மொக்கையாக சிந்தித்துவிட வேண்டாம். இது வேறு தகவல். 

அதாவது அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜியை வீழ்த்தியே தீருவோம்! என்று கங்கணம் கட்டிக் கொண்டு களமிறங்கியது அ.தி.மு.க. இதற்காக அத்தொகுதியில் பல நலத்திட்டங்களை தேர்தல் நடைமுறை துவங்கும் முன்னரே அறிவித்து மக்களை கூல் பண்ணினர். 
இதில் டென்ஷனான செந்தில்பாலாஜி விட்டார் பாருங்க ஒரு அறிவிப்பை. அது ‘நான் இத்தொகுதி எம்.எல்.ஏ.வானால் வீடில்லாத மக்களுக்கு இலவசமாக 3 சென்ட் நிலத்தை வழங்குவேன்’ என்பதுதான். இந்த அறிவிப்பில் எடப்பாடியாரை விட அதிகம் அதிர்ந்தது ஸ்டாலின் தான்.  செந்தில்பாலாஜியிடம் ‘இது சாத்தியமா? இதை நம்பி மக்கள் ஓட்டுப்போட்டு, ஜெயிச்ச பிறகு நீ வாக்கை நிறைவேத்தலேன்னா நம்ம கட்சியோட பேரு கெட்டுடுமே தம்பி.’ என்றார். ஆனால் செந்தில்பாலாஜியோ சில ஏக்கர் நிலங்களைன் டாகுமெண்டுகளை காட்டி, நிச்சயம் இதை பிரிச்சு கொடுப்பேன் ஏழை மக்களுக்கு! என்றார். ஸ்டாலினும் இதை நம்பி, உற்சாகமாக அந்த வாகுறுதியை வைத்து பிரசாரம் செய்தார்.செந்தில்பாலாஜி ஜெயித்தார். தேர்தல் முடிந்து மூன்று மாதங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால் இதுவரையில் ஒரு நபருக்கு ஒரு சென்ட் நிலம் கூட செந்தில்பாலாஜி வழங்கவில்லை. 

இந்நிலையில், இவ்விவகாரம் இப்போது பெரிய பஞ்சாயத்தாக உருவெடுத்து வருகிறது. செந்தில்பாலாஜி போகுமிடமெல்லாம் ‘3 சென்ட் நிலம் எங்கே?’ என்று போர்டை நீட்டுகின்றனர் தொகுதி மக்கள். இணையதளத்திலோ செந்தில்பாலாஜியோடு சேர்த்து தி.மு.க.வையும், ஸ்டாலினையும் ‘பொய் வாக்குறுதி கட்சி, பொய் வாக்குறுதி தந்த தலைவர்’ என்று தாறுமாறாக திட்டுகின்றனர். இதுபோக ‘இனி கரூர் மாவட்டத்தில் எந்த தொகுதியிலும், எந்த தேர்தலிலும் தி.மு.க.வுக்கு ஓட்டு கிடையாது.’ என ஒரு தகவல் தீயாய் மக்களிடம் பரவிக் கிடக்கிறது. 
இதெல்லாம் ஸ்டாலினின் கவனத்துக்குப் போனதும் அவர் கடும் டென்ஷனாகிவிட்டார். இலவச நிலம் என்னாச்சு? என்று செந்தில்பாலாஜியிடம் அவர் கேட்க, ‘பிராசஸ் போயிட்டிருக்குது தலைவரே’ என்றாராம் பொத்தாம் பொதுவாக. இதில் ஸ்டாலின் ஏக டென்ஷனாகிவிட்டார்.

விளைவு, கொங்கு மண்டலத்தின் முக்கிய மாவட்டமான கரூரில் செந்தில்பாலாஜி எனும் இளைஞர் இருந்தும் கூட, மகேஷ் பொய்யா மொழியை அந்த மண்டல இளைஞரணி பொறுப்பாளராக்கி நோஸ்கட் கொடுத்துள்ளார். ஆக இந்த நில விவகாரத்தினால் தான் கட்சியில் கட்டம் கட்டப்படுவது தெரிந்து, சில அதிருப்தி  மற்றும் அலட்சிய வேலைகளை காட்டத் துவங்கிவிட்டாராம் பாலாஜி. இது உடனடியாக ஸ்டாலினின் கவனத்துக்குப் போக இருவருக்கும் இடையில் உரசல் வீரியமாக துவங்கியுள்ளது! என்கிறார்கள். வெளங்கிடும்!

click me!