வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்ட ஆ.ராசா... பதட்டத்தில் சகட்டுமேனிப்பேச்சு..!

By Thiraviaraj RMFirst Published Dec 9, 2020, 6:19 PM IST
Highlights

2ஜி மேல்முறையீட்டில் நிச்சயம் தப்பிக்க முடியாது என்பதை உணர்ந்திருக்கும் அவர் பதட்டத்தில் சகட்டுமேனிக்கு பேச, அது மேலும் சிக்கல்களை உருவாக்கி இருக்கிறது. 

’வாயைக் கொடுத்து புண்ணாக்கிய கதை’யாகி விட்டது முன்னாள் மத்திய அமைச்சரும், திமுகவின் துணை பொதுச் செயலாளருமான அ.ராசாவின் நிலைமை. துடுக்குத் தனமான பேச்சுக்கு பெயர்பெற்ற ஆ.ராசா அண்மையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி ஆகியோர் பற்றி தரம்தாழ்ந்து விமர்சனம் செய்ய, அதுவே அவருக்கு அடுத்தடுத்து சிக்கல்களை உருவாக்கி வருகிறது.

ஜெயலலிதா, எடப்பாடி ஆகியோரை வரம்புமீறி விமர்சித்ததற்காக ஆ.ராசா மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அதிமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த திருமாறன், டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி காவல்துறையினர் தீவிர பரிசீலனை செய்து வருகின்றனர்.

ஜெயலலிதா, எடப்பாடி மீதான அறுவெறுக்கத்தக்க விமர்சனங்களால் கொதித்து போயிருக்கும் அதிமுக ஐடி விங்கும் தன் பங்கிற்கு சாட்டையை சுழற்ற ஆரம்பித்துள்ளது. 1லட்சத்து 65 ஆயிரம் கோடி 2ஜி வழக்கில் தொடர்புடைய ராசாவின் நதிமூலம், ரிஷிமூலத்தை ஒரு டீம் தோண்டித் துருவ ஆரம்பித்துள்ளது.
25 ஆண்டுகளுக்கு முன்பு மிகச் சாதாரண நிலையிலிருந்த இவரின் இன்றைய இமாலய வளர்ச்சியின் பின்னணி பற்றி அலசி ஆராயப்படுகிறது. உள்நாடு, வெளிநாடுகளில் செய்யப்பட்டிருக்கும் முதலீடுகளும் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்திற்கும் மேலாக  தற்கொலை செய்துகொண்ட ஆ.ராசாவின் நெருங்கிய நண்பரான சாதிக்பாட்சா விவகாரத்தை தூசி தட்டும் வேலையும் தொடங்கப்பட்டுள்ளது.
  
2ஜி விவகாரம் சூடுபிடித்திருந்த காலக்கட்டத்தில் ஆ.ராசாவின் பினாமியான சாதிக்பாட்சாவிடமும் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டிருந்தது. இந்தநிலையில்தான் கடந்த 2011 மார்ச் 16 ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் அவர் தற்கொலை செய்துகொண்டார். ஆ.ராசா உள்ளிட்ட திமுகவினரின் மிரட்டல்களுக்கு பயந்தே தனது கணவர் தற்கொலை செய்துகொண்டதாக சாதிக்பாட்சா மனைவி ரேகா பானு பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். இதனைத் தொடர்ந்து ரேகா பானுவின் கார்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக அவர் போலீசிலும் புகார் அளித்தார்.
அமுங்கிக் கிடந்த இந்த விவகாரத்திற்கு உயிர் கொடுக்கும் வேலைகள் தற்போது வேகமெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

சாதிக்பாட்சாவுக்கும், ஆ.ராசாவுக்கும் இடையில் என்ன மாதிரியான உறவு இருந்தது? இருவருக்கும் இடையிலான பணப் பரிவர்த்தனைகள், தற்கொலையின் நிஜ பின்னணி போன்றவை குறித்து மீண்டும் தீவிர விசாரணை நடத்தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் பற்றி கருத்துத் தெரிவித்த மூத்த பத்திரிகையாளர் ஒருவர்,’’சுடுகாட்டின் வழியே நடுக்கத்தோடு போகும் ஒருவர் தாம் பயப்படவில்லை என்பதை காட்டிக்கொள்ள விசிலடித்தபடியே சென்றாராம். அந்த நிலையில்தான் இப்போது ராசாவும் இருக்கிறார். 2ஜி மேல்முறையீட்டில் நிச்சயம் தப்பிக்க முடியாது என்பதை உணர்ந்திருக்கும் அவர் பதட்டத்தில் சகட்டுமேனிக்கு பேச, அது மேலும் சிக்கல்களை உருவாக்கி இருக்கிறது. ஆ.ராசாவின் அத்துமீறிய பேச்சுக்களை திமுகவிலேயே ஒரு குரூப் சுத்தமாக விரும்பவில்லை. ஆக மொத்தத்தில் இந்தமுறை ஆ.ராசா தண்டனைகளிலிருந்து தப்பிப்பது ரொம்பவே கடினம்’’என்கிறார்கள். 

click me!