
எடப்பாடி தரப்பும், பன்னீர் தரப்பும் இணைவதற்கு தயார் என்று பலமுறை கூறிவிட்டாலும், பேச்சு வார்த்தையை கூட தொடங்கமுடியாமல், ஏதோ ஒரு சக்தி தடுத்து கொண்டிருக்கிறது என்று அதிமுகவினர் சிலரே கூறுகின்றனர்.
அதை நிரூபிப்பது போல, நாஞ்சில் சம்பத்தும், பெங்களூரு புகழேந்தியும், தினகரன் கைதை கண்டித்து நடைபெறும் போராட்டங்கள், மற்றும் பொது கூட்டங்களில் பங்கேற்று வருகின்றனர்.
அம்மா, சின்னம்மா இல்லாத வெற்றிடத்தை நிரப்ப, தினகரனை தவிர வேறு யாரும் இல்லை என்று அவரை வானளாவ புகழ்வதும், மறுபக்கம், பன்னீர் அணியை கடுமையாகவும், எடப்பாடி அணியை லேசாகவும், அவர்கள் சாடி வருகின்றனர்.
மேலும், அதிமுக எம்.எல்.ஏ க்களில் 87 பேரின் ஆதரவு தினகரனுக்கு இருப்பதாகவும், கட்சிக்கு துரோகம் செய்த பன்னீரை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் வெளிப்படையாகவே, நாஞ்சில் சம்பத் பேசி வருகிறார்.
இதன் மூலம், அதிமுகவின் இரு அணிகள் இணைப்புக்கு தடையாக இருப்பது, தினகரன் ஆதரவாளர்கள் என்பது உறுதியாகி விட்டது.
இந்நிலையில், தினகரனுக்கு ஆதரவு என்று நேரடியாக சொல்லாமல், மதுரை மாவட்ட அதிமுக செயலாளரும், எம்.எல்.ஏ விமான ராஜன் செல்லப்பா, நேற்று மதுரை மாவட்ட கட்சி நிர்வாகிகள், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை கூட்டி, ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தி உள்ளார்.
அதில் , ஏ.கே.போஸ், நீதிபதி, பெரிய புல்லான் உள்ளிட்ட எம்.எல்.ஏ க்களும், கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில், அணிகள் இணைய தேவை இல்லை என்றும், பேச்சுவார்த்தை குழுவை கலைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.
அத்துடன், பன்னீர் அணிக்கு சென்றுள்ள எம்.எல்.ஏ க்கள் மற்றும் எம்.பி க்களை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்றும் வலியுறுத்த பட்டுள்ளது.
ஆகவே, அதிமுகவில், பன்னீர் அணி, எடப்பாடி அணி என்பதை விட, தினகரன் அணியே வலுவாக உள்ளது.
எம்.எல்.ஏ, எம்.பி போன்ற பதவியில் இல்லாத நாஞ்சில் சம்பத், புகழேந்தி போன்றவர்கள் முதலில் தினகரனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.
ராஜன் செல்லப்பா தலைமையில், தற்போது எம்.எல்.ஏ க்களும், தினகரன் பேரை சொல்லாமல், அவருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.
ஆகவே, அதிமுகவில் உள்ள தினகரன் ஆதரவு அணி, இனி கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்திற்கு வரும் என்கின்றனர், விவரம் அறிந்தவர்கள்.