எதுவும் கிடைக்காத நாய், எலும்புத் துண்டு.. நாம் தமிழரை டார் டாராக கிழித்து தொங்க விட்ட கொளத்தூர் மணி.

By Ezhilarasan BabuFirst Published Apr 24, 2021, 4:00 PM IST
Highlights

திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி நாம் தமிழர் கட்சிக்கு எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதன் முழு விவரம்,கழகத் தோழர்களுக்கு, வணக்கம் 

திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி நாம் தமிழர் கட்சிக்கு எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதன் முழு விவரம்: 

கழகத் தோழர்களுக்கு, வணக்கம். 

அண்மைக்காலங்களில் நாம் தமிழர் என்கிற கட்சியைச் சார்ந்த சில யூடியூப் சேனல்களிலும், சமூக வலைதளங்களிலும்,அந்த கட்சியின் சில பொறுப்பாளர்களும், திராவிடர் இயக்கம் குறித்தும், என்னைக் குறித்தும் கீழ்த்தரமான சொற்களைப் பயன்படுத்தி பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும், ஒருமையில் பேசுவதும், நிதானமின்றி சினமூட்டும் சொற்களை பயன்படுத்துவதும், நம்மை இழிவு படுத்துவதாக நினைத்துக்கொண்டு அவர்களின் கீழ்த்தரமான இயல்பை வெளிப்படுத்தி எழுதுவதும், பேசுவதும் பரவலாகக் காணப்படுகிறது. 

இந்துத்துவவாதிகளின் இப்பாணியை அவர்களின் நேச சக்தியான இவர்களும் கடைபிடிப்பதில் நமக்கு வியப்பு ஏதும் இல்லை. இவற்றைப் பார்த்து கோபமுற்ற, சமூக வலைதளங்களில் இயங்கும்  நம்முடைய தோழர்களில் சிலர் அவர்களைப் போலவே கடும் சொற்களைப் பயன்படுத்தி விடையளிப்பது என்ற போக்கு தற்போது  தொடங்கியிருக்கிறது. பந்தை அடிக்க முடியவில்லை என்றால் காலைத் தாக்கு என்ற முறைகேடான விதிகளின் படி நடந்து கொள்ளுகிற அவர்களுக்கு, அவர்களைப் போலவே கீழிறங்கி பதில் உரைப்பது என்பது நம்முடைய தரத்தைக் குறைத்துக் கொள்வதாகவே நான் கருதுகிறேன். 

சாப்பிட எதுவும் கிடைக்காத நாய், தரையில் கிடந்த எலும்பை எடுத்துக் கடித்து, அதனால் ஏற்பட்ட வாய்க் காயத்திலிருந்து வெளிவரும் இரத்தத்தை சுவைத்து மன நிறைவு பெறுமாம்.  அது போல யாரையாவது திட்டித் தீர்க்க எது கிடைத்தாலும் வாயில் போட்டு சுவைக்கும் மன நோய் பல பேருக்கு உண்டு. மேலும், சாக்கடை சேற்றில் புரண்டு எழுந்த  பன்றி நம்மீது உராய்ந்து விட்டது என்பதற்காக நாமும் சாக்கடைக்குள் குதித்து உருண்டுவிட்டு வந்து அந்த பன்றியை உராய்ந்து பழிதீர்த்துக் கொள்ள முடியாது. அது அறிவுடையவர்கள் செய்கிற செயலும் ஆகாது. எந்த காரணம் கொண்டும் நம்முடைய தோழர்கள் எதிர்வினை ஆற்றும் போது  தரம் தாழ்ந்த இழி சொற்களை பயன்படுத்த வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். விமர்சனங்கள், அவதூறுகளுக்கு பதில் அளிக்கும் போது நாம் நாகரீகமான சொற்களில் பதில் அளிப்பது என்பதுதான் நமது பண்பு. 

அவர்களிடம் அப்பண்பு இல்லை, இருக்காது இனியும் வராது என்பதையும் நாம் நன்கறிவோம். ஆனாலும் நாம் நம் தரத்தை, பண்பை எந்த சூழலிலும் இழக்காமல் பதில் அளிப்பது என்பதுதான் நமக்கு உகந்ததாக இருக்கும். மேலும் ஏதேனும் சிறிது அரசியல் அறிவோ, அரசியல் வரலாறோ தெரிந்தவர்களிடம் விவாதிப்பது சிறு பலனைத் தரலாம். ஆனால் எதுவும் தெரியாதவர்களுடன் பேசி பலனில்லை என்பதையும் மனதில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கிளிகளுக்கு பேச கற்றுக் கொடுக்க முயற்சிப்பது புத்திசாலித்தனமாக இருக்கலாம். ஆனால் அதே முயற்சியை பிணந்திண்ணி கழுகுகளிடம் செய்வது எந்த பலனையும் கொடுக்காது என்பதையும் மனதில் கொள்ளுங்கள். இவ்வாறுஅதில்  கூறப்பட்டுள்ளது.

 

click me!