வேலூரில் அமமுக வாக்குகளைப் பெற வியூகம்... ஏ.சி.சண்முகத்தின் சென்டிமெண்ட் அட்டாக்!

By Asianet TamilFirst Published Jul 13, 2019, 7:42 AM IST
Highlights

வேலூரில் அமமுக தொண்டர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. அமமுகவினரின் வாக்குகளைப் பெறும் வகையில் ஏ.சி. சண்முகம் அவர்களை இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க செய்யும் வேலையைத் தொடங்கியிருப்பதாக புதிய நீதிக்கட்சியினர் தெரிவிக்கிறார்கள்.  
 

வேலூரில் டிடிவி தினகரன் போட்டியிடாமல் ஒதுங்கிக்கொண்டதால், அமமுகவினரின் வாக்குகளைக் கவர அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் சென்டிமெண்ட் பேச்சில் இறங்கியிருக்கிறார். 
 வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடபோவதில்லை என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்தார். கட்சியைப் பதிவு செய்து, பொதுச் சின்னம் பெற்ற பிறகே தேர்தலில் போட்டி என்று அதற்கு டிடிவி தினகரன் காரணமும் சொல்லிவிட்டார். டிடிவி தினகரன் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக்கொண்டதை அதிமுக கிண்டல் செய்துவருகிறது. தினகரனை மக்கள் நிராகரித்துவிட்டார்கள் என்றும் முதல்வர் தொடங்கி அமைச்சர்கள் வரை எல்லோரும் பேசிவருகிறார்கள்.


ஆனால், டிடிவி தினகரன் வேட்பாளரை நிறுத்தாமல் போனதில் வேலூர் தொகுதியின் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் குஷியில் இருந்துவருகிறார். வேலூரில் கடந்த ஏப்ரலில் தேர்தல் நடைபெற இருந்தபோது, அமமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் அறிவிக்கப்பட்டிருந்தார். இவர் வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அணைக்கட்டு தொகுதியைச் சேர்ந்தவர். அத்தொகுதியிலிருந்து இருமுறை அதிமுக எம்.எல்.ஏ.வாகத் தேர்வு செய்யப்பட்டவர். அணைக்கட்டு தொகுதியில் ஓரளவுக்கு தனிப்பட்ட செல்வாக்கு உள்ளவர். முன்னாள் அமைச்சர் என்பதாலும் வேலூரில் அறியப்பட்டவர். அதன் அடிப்படையில்தான் வேலூரில் பாண்டுரங்கனுக்கு டிடிவி தினகரன் சீட்டு கொடுத்தார்.


வேலூரில் எப்போது தேர்தல் நடைபெற்றாலும் அவரே வேட்பாளராக இருப்பார் என்றே அமமுகவினர் சொல்லிவந்தனர். ஆனால், தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து அமமுக பின்வாங்கிவிட்டதால். அக்கட்சி தொண்டர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இந்நிலையில் அமமுகவினரின் வாக்குகளைப் பெறும் வகையில் ஏ.சி. சண்முகம் அவர்களை இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க செய்யும் வேலையைத் தொடங்கியிருப்பதாக புதிய நீதிக்கட்சியினர் தெரிவிக்கிறார்கள்.

 
உண்மையில் டிடிவிதினகரன் தேர்தலில் ஒதுங்கிகொண்டதால், ஏ.சி. சண்முகம் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்துவருகிறார். அமமுகவினரை கவரும் வகையில், “நீங்கள் வளர்த்த இயக்கம் அதிமுக. நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சோதனையைச் சந்தித்திருக்கிறது. மீண்டும் தாய்க் கழகத்துக்குத் திரும்பி, தேர்தலில் பணியாற்றி என்னைப் பெற செய்யுங்கள்” என சென்டிமெண்டாகப் பேசத் தொடங்கியிருக்கிறார் ஏ.சி. சண்முகம். சென்டிமெண்ட் வேலை செய்யுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

click me!