
’கழகத்தில் இளம் ரத்தங்களை அதிகம் இணையுங்கள், வாய்ப்பு கொடுங்கள். அவர்களால்தான் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வரமுடியும்!’_ அப்பல்லோவுக்கு தூக்கிச் செல்லப்படுவதற்கு சில தினங்களுக்கு முன் ஜெயலலிதா உதிர்த்த வார்த்தைகளில் இவையும் ஒன்று.
ஜெயலலிதாவின் இந்த வார்த்தையை நிர்வாகிகள் எந்தளவுக்கு மதித்தார்கள் என்பது விடையற்ற வினாதான். ஆனால் குழம்பிக் கிடக்கும் அ.தி.மு.க.வின் பெரும் பகுதி இன்று மூன்று இளைஞர்களை மையமாக வைத்து சுழல ஆரம்பித்திருக்கிறது.
இவர்களில் ஒருவர் ஜெயலலிதாவின் இரத்த சம்பந்தம் மற்ற இருவரும் சசிகலாவின் இரத்த உறவுகள் என்பதுதான்.
யார் அவர்கள்?...விவேக், ஜெயானந்த் மற்றும் தீபக் ஆகிய மூவரும்தான்.
இவர்கள் மூன்று பேரும் நேரடியாக அ.தி.மு.க.வின் களப்பணிகளில் இறங்கவில்லை. ஆனால் ஜெயலலிதாவின் சொத்துக்களையும், ஜெ., வழியாக சசிகலா சேர்த்த சொத்துக்களையும் ஏகபோகமாக அனுபவிக்கும் இளைஞர்கள் இவர்கள்.
இவர்களால் கட்சிக்கு என்னென்ன நன்மைகள் நடந்திருக்கின்றன? என்று அலசினால் ஏமாற்றம் மிஞ்சலாம். ஆனால் கழகத்தின் முக்கிய திருப்புமுனைகளை உருவாக்கியதில் இவர்களின் தோளும் இருக்கிறது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றல்லவா!
சரி, இனி இவர்களின் ப்ரொஃபைலை ஒவ்வொன்றாக பார்ப்போம்...
விவேக் :
சசிகலாவின் அண்ணியும், அவரின் தற்போதைய சக சிறைவாசியுமான இளவரசியின் மகன். வேதா நிலையம் கடைசியாக கண்ட நல்ல காரியம் கடந்த ஆகஸ்டில் நடந்த இவருக்கான திருமண ஏற்பாடுகள்தான். ஜெயலலிதா கடைசியாக கண்ணுற்ற மங்களகரமான விஷயமும் விவேக் _கீர்த்தனா தம்பதியை வாழ்த்தியதுதான்.
ஜாஸ் சினிமாஸின் நிர்வாக இயக்குநரான விவேக் ஆளைப் பார்க்கத்தான் பால் வடியும் பாலகன். ஆனால் நிர்வாக திறமையில் அல்லு கிளப்பும் புள்ளி. இத்தனை ஆண்டுகள் ஜெயலலிதாவின் மனசாட்சியாகவே வாழ்ந்திருந்தாலும் கூட சசிகலாவே பல நேரங்களில் ஜெ.,விடம் எதையும் பேச பயப்படுவார்.
ஆனால் ஜெயலலிதாவிடம் எந்த தயக்கமும், பயமுமின்றி மிக சரளமாக தமிழ், ஆங்கிலம் என்று ரவுண்டு கட்டி விவாதிக்கும் ஒரே ஆண் விவேக்தான். பைக் பிரியர். அரசியல், பிஸ்னஸ், ரேஸ், சினிமா என சகல ஃபீல்டையும் தெளிவாக கவனிக்கும் இளைஞர். ஜெ., இறந்த பின்னான சூழலில் ஒரு பத்திரிக்கையில் ஏழை இளைஞர் ஒருவரை பற்றிய கட்டுரை வந்திருந்தது.
ரேஸ் பைக் வாங்குவதற்காக பட்டினி கிடந்து பணம் சேர்க்கும் அவரை பற்றி படித்த மாத்திரத்தில் தனது அத்தை சசிகலாவிடம் சொல்லி அந்த இளைஞரை தோட்டத்துக்கு வரவழைத்து ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க வைத்தார் விவேக். செய்ய வேண்டிய பணியை ஜெட் வேகத்தில் செய்யும் துடிப்புதான் விவேக்கின் ஸ்பெஷாலிட்டி.
ஜெயலலிதா ஏதேதோ அரசியல் மற்றும் பர்ஷனல் காரணங்களுக்காக சுதாகரனை தன் வளர்ப்பு மகனாக அறிவித்தார். ஆடம்பரமாக திருமணத்தை நடத்தினார். அதன் பின் சுதாகரனும் அவரது மனைவி வீடான நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பமும் பட்ட துயரங்கள், வருத்தங்கள் எல்லாம் உலகம் அறிந்ததே.
ஆனால் விவேக்கை அப்படியெல்லாம் ஜெயலலிதா அறிவிக்கவில்லை. ஆனால் தன் மகன் போலவே அவரை பாவித்தார் என்கிறார்கள்.
ஜெ., இருக்கும் போதும் சரி, இறந்த பின்னும் சரி நேரடி அரசியலில் விவேக் தலையிட்டதில்லை. ஆனால் மிக திறமையான இளம் ரத்தம் இவர் என்பது அ.தி.மு.க.வின் முக்கிய தலைகள் அத்தனை பேருக்கும் தெரியும். ஒரு காலத்தில் டி.டி.வி. தினகரனெல்லாம் திரைமறைவில் கழக எழுச்சிக்காக இயங்கியது போல் ’பிஹைண்டு தி ஸ்கிரீன்’ ஆளுமையாக செயலாற்றும் திறன் முழுமையாக இருக்கிறது.
சசிகலா சிறை தள்ளப்பட்டு, தினகரன் மீது வழக்கு பாய்ந்த நிலையில் அடுத்த குறி விவேக்தான் என்று பெரிய டாக் ஓடியது. அந்தளவுக்கு ஈர்ப்பை கிளப்பியிருக்கும் இளைஞன்.
அ.தி.மு.க.வில் சூழல் குழம்பிக் கிடக்கும் நிலையில் மிக நிச்சயமாக இவரை தீவிர அரசியலுக்கு இழுக்கிறது அ.தி.மு.க.வின் பட்டாளம் ஒன்று . ஆனால் சசி மற்றும் இளவரசியின் ஒப்புதல் இல்லாமல் கரைவேஷ்டி கட்டிடவே மாட்டார் விவேக்.
ஜெயானந்த்:
இவரும் சசியின் மருகன் தான். சசியின் தம்பி திவாகரனின் மகன். ஆள் ஹீரோ போல் இருந்தாலும், இவரிடமிருந்து வந்து விழும் வார்த்தைகளெல்லாம் ஆண்ட்டி ஹீரோ போல் இருப்பதுதான் ஹைலைட். அப்பாவை போலவே அதிரடி குணமிருக்கிறது. ஆனாலும் அப்பாவை விட அதிகம் பாய்ச்சல் காட்டுவார் என்பதே கழகத்தினரின் கணிப்பு.
பன்னீர் பிரிந்தபோது, எடப்பாடி அணி சசிகலாவை கட்சியிலிருந்து விலக்கி வைத்தபோது...ஜெயானந்தின் ட்விட்டர் அக்கவுண்ட் தீப்பிடித்து எரிந்தது. ஆம் அந்தளவுக்கு வார்த்தைகளில் அக்னி காட்டிய எமோஷனல் இளைஞர்.
இப்போது கூட ஆங்கில சேனல் ஒன்றுக்கு தான் அளித்திருக்கும் பேட்டியில் ‘கட்சி சசி அத்தையிடம்தான் இருக்கிறது, அவர்தான் இப்பவும் எப்பவும் பொதுச்செயலாளர், பன்னீருடன் இணைய வாய்ப்பே இல்லை, பா.ஜ.க. மற்றும் தி.மு.க.வால் எங்களை அசைக்கவே முடியாது, பொய் வழக்கில் கிடைத்த சிறைத்தண்டனையிலிருந்து அத்தை மீள்வார்.’ என்று தெறிக்கவிட்டிருக்கிறார் அரசியல் கருத்துக்களை.
நாங்கள் மன்னார் குடி மாஃபியாதான் ஆனால் தி.மு.க. மாஃபியாவை எதிர்த்து போராட வந்தவர்க என்று தங்கள் குடும்பத்தை கெத்தாக முன்னிருத்தியிருக்கும் ஜெயானந்தின் அதிரடி புதிதாகவும், துள்ளலாகவும் தெரிகிறது அ.தி.மு.க. தொண்டர்களுக்கு.
தனக்கு அரசியல் ஆசை இருக்கிறது, அரசியலை கவனிக்கிறேன், சரியான நேரம் வரட்டும் என்றெல்லாம் செம தில்லாக பேசும் ஜெயானந்தின் பின்னே அவரது அப்பா திவாகரன் இருக்கிறார்தான்.
புது ரூட்டில் பாய்ச்சல் காட்டும் தினகரனை சரிகட்ட திவாகரனை இறக்கினார் சசி. ஆனால் திவாவால் எதுவும் முடியவில்லை. இந்த நிலையில் மருமகன் ஜெயானந்தின் அரசியல் பாய்ச்சல் சசியின் காதுகளை எட்டியிருக்கிறது. இதை அவர் எப்படி எடுத்துக் கொள்கிறார் என்பது புதிர்தான்.
ஒருவேளை சசியே தடுத்தாலும் ஜெயானந்த் அரசியலுக்கு வந்தே தீர்வார் என்றே தெரிகிறது.
தீபக்:
ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயராமனின் மகன், தீபா பேரவையின் நிறுவனன் தீபாவின் சகோதரர், எழுச்சி அரசியல்வாதி மாதவனின் மச்சான்.
காலக்கொடுமை ஒன்றை கவனியுங்கள்...ஆகப்பெரிய அரசியல்வாதியான ஜெயலலிதாவுக்கு பர்ஷனல் உதவி செய்ய வந்த சசிகலாவின் அண்ணன் மற்றும் தம்பி மகன்கள் பிஸ்னஸில் கிங்காகவும், அரசியலில் அதிரடி நாயகர்களாகவும் வளர்ந்து வருகிறார்கள்.
ஆனால் கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர் என்று போற்றப்பட்டு, அரசியலில் இரும்புப் பெண்மணியாய் வாழ்ந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகனோ கட்சிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை, அத்தை சேர்த்த கரன்ஸியில மட்டும் கட்டிங் கொடுங்க என்பது போல் பிஹேக் பண்ணுகிறார்.
ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கை, சசியுடன் சேர்ந்து செய்தபோது கட்சியில் பெரிய தலக்கட்டாக தீபக் உருவெடுப்பார் என்று நம்ப்பப்பட்டது. ஆனால் இப்படி பணக்கட்டை பற்றி மட்டுமே அவர் யோசிப்பார் என்று யாரும் நினைக்கவில்லை.
சசியின் மருமகன்களோ ஜெ., சேர்த்து வைத்த சொத்தையும், கட்சியையும் இரு மடங்காக வளர்க்கும் தொனியில் செயல்படுகிறார்கள்.
ஆனால் ஜெ.,வின் மருமகனோ அந்த சொத்து யாருக்கு, இந்த சொத்து எனக்கு, எந்த சொத்திலும் தீபாவுக்கு சம்பந்தமில்லை, புழல் சிறைக்கு போய் சிக்கன் சாப்பிடுவேன், கருணாநிதி மிகப்பெரிய அரசியல்வாதி அவரோடு என் அத்தையை கம்பேர் செய்யவே மாட்டேன்....என்றெல்லாம் பேட்டி கொடுத்து கழக மானத்தோடு, தன் அத்தை ஜெயலலிதாவின் மரியாதையும் சேர்த்து சிதிலமாக்குகிறார் என்று புலம்புகிறார்கள் நடுநிலை அ.தி.மு.க.வினர்.
கட்சியை நிர்வகிக்க வரலாம் அல்லது ஜெயலலிதா சேர்த்து வைத்த சொத்துக்களையாவது திறம்பட நிர்வகிக்க போகலாம். ஆனால் தீபக்கோ இந்த இரண்டிலும் ஆர்வம் காட்டாமல் தீராத விளையாட்டுப் பிள்ளையாகவே இருக்கப்பார்க்கிறார்.
ஆனாலும் கூட ஒரு டீம் இவரை அரசியலுக்குள் இழுக்கிறது. அப்படியே வந்தாலும் தீபக் இந்த கட்சியை தூக்கி நிறுத்த என்ன செய்துவிடுவார் என்பது தவுசண்ட் டாலர் கேள்வியே!
ஆக இன்றைய அ.தி.மு.க.வில் ஆயுத எழுத்து போல் முக்கிய இளம் ரத்தங்களாக வலம் வரும் இந்த மூவரில் யார் கரையேறுவார்கள்? யார் காணாமல் போவார்கள்? என்பதை காலம் சொல்லும்.