
மாட்டிறைச்சி விவகாரத்தில் தீர்மானம் கொண்டுவரவேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் தமிழக அரசு மவுனம் காத்து வருவதாகவும், தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் எடப்பாடி தலைமையிலான அரசு பாஜகவின் காலில் தஞ்சம் அடைந்து கிடப்பதாகவும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இறைச்சிக்காக மாடுகளை விற்கவோ வாங்கவோ கூடாது சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு ஆணை பிறப்பித்தது. இதற்கு இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது.
கேரளா, மேகாலயா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்த சட்டத்தை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஆனால் தமிழகத்தில் மக்களுக்கு பிடிக்காத எந்த ஒரு திட்டத்தையும் அரசு அனுமதிக்காது என்று அமைச்சர்களும் எம்.பிக்களும் கூறினாலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இதுகுறித்து விரைவில் பதிலளிக்கப்படும் என்றே கூறி வந்தார்.
இதனால் அதிருப்தி அடைந்த மாணவர்கள் அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதைதொடர்ந்து மாட்டிறைச்சி தடை குறித்து மத்திய அரசு பிறப்பித்த ஆணைக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக எதிர்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
இந்நிலையில் இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மாட்டிறைச்சி விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 40 ஆண்டுகளாக பசுவதை சட்டம் உள்ளதாகவும், நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என தெரிவித்தார்.
இதையடுத்து முதலமைச்சர் பதிலில் திருப்தி இல்லை என கூறி திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திமுக செயல்தலைவர் ஸ்டாலின், மாட்டிறைச்சி விவகாரத்தில் தீர்மானம் கொண்டுவரவேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் தமிழக அரசு மவுனம் காத்து வருகிறது என தெரிவித்தார்.
தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் எடப்பாடி தலைமையிலான அரசு பாஜகவின் காலில் தஞ்சம் அடைந்து கிடப்பதாகவும், வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சி.பிஐ எதாவது தமது வீட்டிற்கு வந்து விடுமோ என எடப்பாடி அஞ்சுவதாகவும் தெரிவித்தார்.