குடிசை இல்லாத தமிழகத்தை உருவாக்க 7,500 கோடியில் திட்டம்: ஒரே அறிவிப்பில் மக்களின் மனதில் இடம் பிடித்த எடப்பாடி

By Ezhilarasan BabuFirst Published Aug 15, 2020, 10:23 AM IST
Highlights

குடிசைகள் இல்லா தமிழகத்தை உருவாக்க ரூ 7,500 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கப்பட உள்ளது என தமிழக முதலமைச்சர் தனது, சுதந்திர தின விழா உரையில் தெரிவித்துள்ளார்.

குடிசை இல்லா தமிழகத்தை உருவாக்க ரூ 7,500 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கப்பட உள்ளது என தமிழக முதலமைச்சர் தனது, சுதந்திர தின விழா உரையில் தெரிவித்துள்ளார்.
 
நாட்டின் 74 ஆவது சுதந்திர தினத்தையொட்டி சென்னை செயின்ட் ஜார்ஜ்  கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர் ஆற்றிய உரையில், மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எண்ணிலடங்கா தலைவர்களின் தியாகத்தால் நமது சுதந்திரம் கிடைத்தது. அந்த சுதந்திரத்தை நாம் பேணிகாக்க வேண்டும். அமைதி, வளம், வளர்ச்சி என்ற அடிப்படையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. கொரோனாவுக்கு எதிராக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கொரோனா நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசின் நிதியிலிருந்து, 6650 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது என்றார்.  மேலும் பல்வேறு திட்டங்களை அறிவித்து அவர் கூறியதாவது:-

சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம் ரூ 8 ஆயிரத்தில் இருந்து ரூ 8,500ஆக உயர்த்தி வழங்கப்படும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வரும்நிலையில் அது விரைவில் திறக்கப்படும், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு வழங்க சட்டம் பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறினார். மேலும் கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், உள்ளாட்சி, வருவாய்த்துறை, காவல் - தீயணைப்புத்துறை மற்றும் அரசு துறை ஊழியர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறினார். 

கொரோனா தொற்றுக்கு எதிராக தமிழக அரசு, பொதுமக்களின் ஒத்துழைப்புடன் போராடி வெல்வோம் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.  மேலும்  கேரள அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பயனாக பரம்பிக்குளம்-ஆழியாறு, பாண்டியாறு - புன்னம்புழா திட்டங்களில் நிலவிய பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக கூறினார். உடுமலைபேட்டையில் புதிய கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் என்ற அவர், உயர்கல்வியில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்றார். கொரோனா காலத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் தடையின்றி கல்வி கற்க வழி செய்யப்பட்டுள்ளது என்ற அவர், அகில இந்திய மருத்துவக் கல்வி இடஒதுக்கீட்டில் சாதகமான தீர்ப்பை பெற்றுள்ளோம் என கூறினார். 

ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ 300 கோடியில் திட்டம் வகுக்கப்படும் என்ற அவர், பெண்களின் வளர்ச்சியை மேம்படுத்த மகளிர் குழுவிற்கு சுழல்நிதி மற்றும் கடன் வழங்கப்படும் என்றார். குடிசை இல்லா தமிழகத்தை உருவாக்க ரூ 7,500 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கப்பட உள்ளது என்றார், கொரோனா காலத்திலும் பொருளாதார நடவடிக்கை மேற்கொள்ள வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்ற அவர் பொருளாதாரத்தில் தமிழகம் வெகு விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என நம்பிக்கை தெரிவித்தார்.

click me!