அதிமுக ஆட்சியில் 74 லட்சம் தடுப்பூசிதான்.. திமுக ஆட்சியில் 1.80 கோடி.. காலரை தூக்கிவிடும் மா.சுப்பிரமணியன்..!

By Asianet TamilFirst Published Aug 9, 2021, 9:54 PM IST
Highlights

மூன்றே மாதங்களில் திமுக ஆட்சியில் 1.80 கோடி கொரோனா தடுப்பூசிகள் இடப்பட்டுள்ளது மிகப் பெரிய சாதனை என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
 

அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்குப் பெறும் முயற்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்துவருகிறார். ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு அளித்த அறிக்கையை வைத்து சட்ட வல்லுநர்களுடன் தொடர்ந்து முதல்வர் விவாதிக்கிறார். திமுக தேர்தல் அறிக்கையில், சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி, அழுத்தம் கொடுப்போம். நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெற முயற்சி மேற்கொள்வோம் என்று சொன்னோம். அந்த வகையிலான முயற்சிகள் தொடர்கின்றன.
நீட் தேர்வு எழுத விண்ணப்பிக்கும் காலம் முடிந்துவிட்டதாக நினைக்கத் தேவையில்லை. அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தேவையான பயிற்சிகள் எல்லாம் அளிக்கப்படுகிறது.கோவாக்சின், கோவிஷீல்டை மாற்றி போட்டு கொள்ளலாம் என்று ஐசிஎம்ஆர் முடிவெடுத்து, தடுப்பூசி குழுவுக்குத் தகவல் அளித்துள்ளது. இதுதொடர்பாகத் தடுப்பூசி குழு அறிவித்தபிறகு தமிழகத்தில் முறையாகச் செயல்படுத்தப்படும்.
ஜூலையில் தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளுக்கு 17 லட்சம் தடுப்பூசிகள் உட்பட மொத்தம் 72 லட்சம் தடுப்பூசிகளே தருவதாக இருந்தது. ஆனால், கடந்த 2 மாதங்களாக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளதைப் பாராட்டி, ஜூலையில் 19 லட்சம் தடுப்பூசிகள் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட்டில் 79 லட்சம் தடுப்பூசிகளைத் தருவதாக மத்திய அரசு கூறியுள்ளது. கடந்த மாதத்தைப் போலவே மத்திய அரசு கூடுதல் தடுப்பூசிகளைத் தரும் என்று கருதுகிறோம். தமிழகத்தில் இதுவரை 2,32,87,240 தடுப்பூசிகள் பெற்று 2,32,30,231 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

 
தமிழகத்தில் இதுவரை இடப்பட்டுள்ள தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 2,49,46,763. அதிமுக ஆட்சியில் ஜனவரி 16 முதல் மே 6 வரை 103 நாட்கள் கொரோனா தடுப்பூசி இடும் பணியை மேற்கொண்டது. இந்த நாட்களில் அதிமுக அரசு சார்பில் 74 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே இடப்பட்டன. 90 நாட்களே ஆன திமுக ஆட்சியில் 1.80 கோடி தடுப்பூசிகள் இடப்பட்டுள்ளன. இது மிகப் பெரிய சாதனை” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
 

click me!