
இந்திய மக்கள் தொகையில் 1 சதவீதத்தினர் 73 சதவீத சொத்துக்களை வைத்திருப்பது பற்றி சுவிஸ் உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி ஏன் பேசவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவில் உள்ள 73 சதவீத சொத்துக்கள் 1 சதவீத மக்களிடம்தான் உள்ளதாக கடந்த ஆண்டு வெளியான சர்வே ஒன்றில் தெரிவிக்கப்பட்ருந்தது. இது பொது மக்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படத்தியது.
தற்போதைய மோடி அரசு பெரும் பணக்காரர்களை தொடர்ந்து ஊக்குவத்து வருதாலேயே இப்படி சொத்துக்கள் ஒரு சிலரிடம் மட்டுமே குவிந்து கிடப்பதாக பொது மக்கள் கருதுகின்றனர்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெறும் உலக பொருளாதார அமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ,அன்புள்ள பிரதமர் அவர்களே, சுவிட்சர்லாந்துக்கு உங்களை வரவேற்கிறோம்! இந்திய மக்கள் தொகையில் ஒரு சதவீதம் உள்ளவர்களிடம் ஏன் 73 சதவீதம் அளவிற்கு இந்தியாவின் சொத்துகள் உள்ளன? என டாவோஸ் நகர மக்களிடம் தயவு செய்து கூறுங்கள். உங்களது உடனடி தகவலுக்காக அறிக்கை ஒன்றையும் இதனுடன் நான் இணைத்து உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் வெளிநாட்டு சுற்று பயணத்தினை விமர்சித்து வரும் ராகுல் காந்தி, பணக்காரர்களுக்காக மத்திய அரசு வேலை செய்கிறது என்றும் மற்றும் அவர்களது கடன்களை தள்ளுபடி செய்கிறது என்றும் தொடர்ந்து குற்றச்சாட்டு தெரிவித்து வருகிறார்.