நீட் தேர்வுக்கு எதிராக பொங்கி எழுந்த 7 மாநில முதலமைச்சர்கள்: இபிஎஸ் அதில் இணைய வேண்டும் என விசிக ஆலோசனை.

By Ezhilarasan BabuFirst Published Aug 29, 2020, 12:07 PM IST
Highlights

நீட் தேர்வை முற்றாக ரத்து செய்ய வேண்டுமெனவும், அதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் எனவும் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி முற்போக்கு  மாணவர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது

.

நீட் தேர்வை முற்றாக ரத்து செய்ய வேண்டுமெனவும், அதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் எனவும் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி முற்போக்கு  மாணவர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்று பரவலில்  உலகிலேயே முதல் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. நாள் ஒன்றுக்கு 75 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய நோயாளிகள் இங்கே கண்டறியப்படுகின்றன. இந்நிலையில் நீட் நுழைவுத் தேர்வையும், ஜேஇஇ நுழைவுத் தேர்வையும் நடத்தியே தீருவோம் என்று மத்திய அரசு பிடிவாதமாக இருப்பது கண்டனத்துக்குரியது. இந்த நுழைவுத் தேர்வுகளை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். 

கொரோனா நோய் பரவல் தடுப்பை வெற்றிகரமாக கையாண்டுவருகிறோம் என்று மத்தியில் ஆளும் பாஜகவினர் பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றனர். நாளொன்றுக்கு 75 ஆயிரத்திற்கும் மேல் புதிய நோயாளிகள் கண்டறியப்படும் நிலையில் அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளில் தாண்டி நோய்த் தொற்று பரவும் நாடுகளின் வரிசையில் உலகிலேயே இந்தியா முதல் நிலையை அடைந்திருக்கிறது. இந்த நோய்த்தொற்று குறையக்கூடிய எவ்வித அறிகுறியும் தென்படவில்லை. இந்நிலையில் நீட் நுழைவுத் தேர்வையும், ஜெஇஇ நுழைவுத் தேர்வையும், நடத்தியே திருவோம் என மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் பிடிவாதமாக கூறிவருகிறார். பல்வேறு மாநில அரசுகளும் தேர்வு நடத்தக் கூடிய சூழல் இல்லை என்று தெரிவித்தும் கூட, மத்திய அரசு இணங்கவில்லை. எனவே பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் 7 மாநில முதலமைச்சர்கள் இணைந்து நீட் நுழைவு தேர்வை ரத்து செய்யும்படி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர். 

தமிழக அரசும் அதுபோல சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும், ஏற்கனவே நீட் நுழைவுத் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று சட்டம் இயற்றி அந்த மசோதாவை மத்திய அரசின் ஒப்புதலுக்கு தமிழக அரசு அனுப்பியுள்ளது. இந்தச் சூழலில் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம், மாறாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறோம் என்று மழுப்புவது ஏற்புடையதாக இல்லை என்பதை தமிழக அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம். இந்த நெருக்கடியான நேரத்தில் மாணவர்களின் உயிரோடு விளையாடாமல், நீட் தேர்வை முற்றாக ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு உடனடியாக வழக்கு தொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். இந்திய அளவில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் 31-8-2020 திங்கட்கிழமை அன்று விடுதலை சிறுத்தைகள் முற்போக்கு மாணவர் கழகத்தின் சார்பில் இணையவழி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!