89 தொகுதி... 68 சதவீத ஓட்டுகள்... அமைதியாக நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு!

First Published Dec 9, 2017, 8:22 PM IST
Highlights
68 pers Turnout in First Phase Says Election Commission


குஜராத்தில் 89 தொகுதிகளில் அமைதியாக நடைபெற்ற முதல் கட்ட சட்டசபை தேர்தலில் 68 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன.

முதல் கட்ட தேர்தல்

குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.

மொத்தமுள்ள 182 தொகுதிகளில், முதல் கட்டமாக தெற்கு குஜராத் மற்றும் சவுராஷ்டிரா பகுதியில் உள்ள 89 தொகுதிகளுக்கு, நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

மோடி-ராகுல்

குஜராத் முதல்-அமைச்சர் விஜய் ரூபானி உள்ளிட்ட 977 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் களத்தில் உள்ளனர். பா.ஜனதா, காங்கிரஸ் இடையே கடும் போட்டி உள்ளது.

22 ஆண்டு காலம் குஜராத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்து வரும் பா.ஜனதா 5-வது முறையாக ஆட்சி பொறுப்பை கைப்பற்ற முனைப்புடன் உள்ளது.

இந்த தேர்தல், குஜராத் மண்ணின் மைந்தரான பிரதமர் மோடிக்கும், காங்கிரசின் புதிய தலைவராக முடி சூட இருக்கும் ராகுல் காந்திக்கும் இடையேயான பலப்பரீட்சையாக பார்க்கப்படுகிறது.

பெண்கள் ஆர்வம்

நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு அமைதியாகவும் விறு விறுப்பாகவும் நடந்தது. பெண்கள் குறிப்பாக முதல் தலைமுறை வாக்காளர்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களிக்க வந்திருந்தனர்.

பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

எந்திரங்களில் கோளாறு

தொடக்கத்தில்50க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிவர செயல்படாததால் வாக்குப்பதிவு நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது.

குறிப்பாக ராஜ்கோட் பகுதியில் 33 வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது.

70 சதவீத வாக்குப்பதிவு

பிற்பகல் 2 மணி வரையிலும், 35.52 சதவீத வாக்குகளும், மாலை 4 மணி வரை 45 சதவீத வாக்குகளும், தேர்தல் முடிவடைந்த நிலையில் 68 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்ததாக அறிவிக்கப்பட்டது.

ராஜ்கோட் மேற்கு தொகுதியில் போட்டியிடும் முதல்வர் விஜய் ரூபானி நேற்று காலை ராஜ்கோட்டில் உள்ள வாக்குச்சாவடிக்கு மனைவியுடன் சென்று வாக்களித்தார்.

மோசடி புகார்-மறுப்பு

நேற்றைய தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரங்கள் ‘புளூ டூத்’ வழியாக இணைக்கப்பட்ட மோசடி நடந்ததாக, போர்பந்தர் காங்கிரஸ் வேட்பாளர் அர்ஜுன் மோத்வாடியா குற்றம் சாட்டி இருந்தார்.

தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி, அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று புகார் குறித்து ஆய்வு நடத்தினார்கள். ஆய்வில், எந்திரங்களில் பொருத்தப்பட்டு இருந்தது வழக்கமான ‘எகோ’ கருவிதான் என்றும் அங்கு மோசடி எதுவும் நடைபெறவில்லை என்றும் பின்னர் தேர்தல் ஆணையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

டிசம்பர் 18-ல் வாக்கு எண்ணிக்கை

இரண்டாம் கட்டமாக, 93 தொகுதிகளுக்கு  14-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 18-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

click me!