நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் எடியூரப்பா !! இத்தனை பேர் அமைச்சர் பதவி கேட்டா என்ன பண்ணுறது ?

By Selvanayagam PFirst Published Aug 3, 2019, 4:30 PM IST
Highlights

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான ஜனதாதளம்- காங்கிரஸ் கூட்டணி அரசை பாஜக கவிழ்த்ததையடுத்து எடியூரப்பா முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். அவர் முதலமைச்சராகி 10 நாட்களுக்கு மேலாகியும் அமைச்சரவையை நியமிக்காமல் இருப்பதற்கான காரணம் தற்போது வெளிவந்துள்ளது.60 பேர் வரை அமைச்சர் பதவி கேட்பதால் யாருக்கு அமைச்சர் பதவி கொடுப்பது என்று தெரியாமல் இடியாப்பச் சிக்கலில் மாட்டிக் கொண்டு தவித்து வருகிறார்.

குமாரசாமி அரசுக்கு ஆதரவு அளித்து வந்த காங்கிரஸ், ஜனதாதளம், சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தங்கள் பக்கம் இழுத்ததன் மூலம் பாஜகவினர் அந்த ஆட்சியை கவிழ்த்தார்கள் 

அவர்களில் 17 பேர் எம்.எல்.ஏ. பதவியை சபாநாயகர் பறித்து விட்டார். இவர்கள் 18 பேருக்கும் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக பாரதிய ஜனதா சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது. அதில், அவர்களுக்கு அமைச்சர் பதவி தருவதாக அளித்த வாக்குறுதியும் ஒன்று. பாஜக பதவி ஏற்ற போது, எடியூரப்பா மட்டும்தான் பதவி ஏற்று கொண்டார்.

இதைத்தொடர்ந்து அமைச்சரவை  விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. அதில், அந்த 18 எம்.எல்.ஏ.க்களும் தங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று கேட்டு வருகிறார்கள். இவர்களில் 17 பேர் எம்.எல்.ஏ. பதவியை சபாநாயகர் பறித்ததுடன் இந்த சட்டசபை காலம் முடியும் வரை மீண்டும் எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிடுவதற்கும் தடை விதித்தார்.

எனவே, அவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தாலும் எம்.எல்.ஏ. ஆக முடியுமா? என்ற கேள்வி இருக்கிறது. அவர்கள் அனைவரும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அதில் ஒரு முடிவு வந்த பிறகு அமைச்சர்  பதவி கொடுக்கலாம் என எடியூரப்பா கருதினார். ஆனால், அவர்கள் அனைவருமே இப்போதே அமைச்சர்  பதவி வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்கள். அவர்களில் 13 பேருக்கு எடியூரப்பா அமைச்சர்  பதவி வழங்க எடியூரப்பா முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.

கர்நாடகாவில் மொத்தம் 33 அமைச்சர்களை நியமிக்க முடியும். அதில் எடியூரப்பாவை தவிர்த்து 32 அமைச்சர்களை நியமிக்க வேண்டும். அதில், 13 அமைச்சர் பதவிகள் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு சென்று விட்டால் 19 பதவிகள் உள்ளன.

ஆனால் பாஜக ஏராளமானோர் அமைச்சர் பதவி வேண்டும் என்று கேட்கிறார்கள். எதிர் அணியில் இருந்து வந்தவர்களுடன் சேர்த்து சுமார் 60 பேர் வரை அமைச்சர்  பதவி கேட்கிறார்கள்.

எனவே, என்ன செய்வது என்று தெரியாமல் எடியூரப்பா தவித்து வருகிறார்.  அவர் 6-ந்தேதி அமைச்சர்கள்  பட்டியலுடன் டெல்லி செல்ல இருக்கிறார். மேலிட தலைவர்களுடன் கலந்தாலோசித்து அது இறுதி செய்யப்படும்.

ஜாதி வாரியாக, பிராந்தியம் வாரியாக அமைச்சர்  பதவி கொடுக்க வேண்டி உள்ளது. எதிர் அணியில் இருந்து வந்தவர்களுக்கு அமைச்சர்  பதவி கொடுப்பதால் அதை சரியாக பிரித்து கொடுப்பதில் சிக்கல் இருக்கிறது.

இதனால் அமைச்சரவை  விரிவாக்கத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!