என் தம்பி திருமாவளவனுக்கு 6 தொகுதிகள்தானா..? திமுகவை வறுத்தெடுத்த கமல்ஹாசன்..!

By Asianet TamilFirst Published Mar 5, 2021, 8:23 AM IST
Highlights

சமூக நீதியை பேசும் திமுக என்னுடைய தம்பி திருமாவளவனுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது  என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திமுகவை விமர்சித்துள்ளார்.
 

திமுக கூட்டணியில் 10 தொகுதிகளை எதிர்பார்த்த விசிகவுக்கு 6 தொகுதிகளை திமுக ஒதுக்கியது. “சனாதன பாஜக ஆபத்தில் தமிழகம் இருப்பதால், திமுக கூட்டணியில் இந்தத் தொகுதிகளை ஏற்றுக்கொள்கிறோம்” என்று திருமாவளவன் தெரிவித்திருந்தார். திமுக கூட்டணியில் குறைந்த தொகுதிகளைப் பெற்றுகொண்டதால் விசிகவினரும் கோபத்தில் உள்ளனர். இந்நிலையில் திமுக கூட்டணியில் திருமாவளவனுக்கு குறைந்த தொகுதிகள் ஒதுக்கியதை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சனம் செய்திருக்கிறார். 
சென்னை மடிப்பாக்கத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசுகையில், “இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. ஆனால், அதை ஒரு முகம் ஆக்கினால் அழகு குறைந்துபோய்விடும். நம்முடைய கீழடியைத் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்கிறார்கள். நாடு முழுவதும் ஒரே கலாச்சாரத்தின் கீழ் கொண்டு வர முயற்சிக்கிறார்கள். ஆனால், அதெல்லாம் நடக்காது. தமிழகத்தில் சமூகநீதியை குத்தகைக்கு எடுத்திருப்பவர்கள் உதட்டளவில் பேசிக்கொண்டிருக்கின்றனர். அவ்வாறு பேசுபவர்கள் சமூகநீதியை உங்கள் உயர்வுக்கு நாங்கள் போட்ட பிச்சை என்றும் சொல்கிறார்கள்.
சமூக நீதி என்பது பிச்சையல்ல. அது மக்களின் உரிமை. அதை புரிய வைக்கவே நவீன அரசியலை முன்னெடுத்து வந்திருக்கிறோம். சமூக நீதியை பேசுபவர்கள்தான் என்னுடைய தம்பி திருமாவளவனுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியுள்ளனர். என்னுடைய தம்பி இங்கு வர வேண்டியவர். அதனை அடுத்த தேர்தலில் பார்த்துக்கொள்வோம். அனைவரும் நம்மை நோக்கி வருவார்கள் என்று பேசுகிறேன். ஆனால், எல்லோரும் அங்கு போகிறார்களே என்றுதானே நினைக்கிறீர்கள்? வர வேண்டியவர்கள் இங்கு நிச்சயம் வருவார்கள். இதுதான் வெல்லும் படை என்பதை மக்கள் வாயிலிருந்து வருவதால், அதை எங்களால் உணர முடிகிறது.” என்று கமல்ஹாசன் பேசினார்.

click me!