நாட்டின் 50 % தொற்று பினராயியின் கேரளாவில்...!! உண்மை காரணம் என்ன.???

By Ezhilarasan BabuFirst Published Jul 29, 2021, 2:31 PM IST
Highlights

இதில் இந்தியாவில் 70 மாவட்டங்களில் அதிகம் நோய் பாதித்த பகுதிகளை தேர்வு செய்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகளின்படி அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் 79% பேருக்கும், நாட்டிலேயே குறைந்த அளவில் கேரளாவில் 44.4 சதவீதம் பேருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பது  கண்டறியப்பட்டுள்ளது. (தமிழகத்தைப் பொறுத்தமட்டில் 69.2 சதவீதம் பேருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது) 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை கட்டுக்குள் வர தொடங்கியுள்ள நிலையில், கேரளாவில் மட்டும் தொற்று எண்ணிக்கை மீண்டும் பன்மடங்கு உயர தொடங்கியுள்ளது. ஒட்டுமொத்த நாட்டின் தொற்று எண்ணிக்கையில் 50% கேரளாவிலிருந்து பதிவாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதல் அலையின்போது  எந்தவித பதற்றமுமின்றி சரியான வியூகம் அமைத்து, கொரோனா தொடர் சங்கிலியை சுக்குநூறாக உடைத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்தியது கேரள அரசு. இதனால், ஐநா சபை உட்பட ஒட்டுமொத்த உலக நாடுகளும் கேரளாவை வெகுவாக பாராட்டின. ஆனால் தற்போது கொரோனா இரண்டாவது அலை நாட்டை மிகக் கடுமையாக தாக்கியுள்ளது. எத்தனையோ நோய் தடுப்பு வியூகங்கள் வகுத்து ஒட்டுமொத்த நாடும் மெல்ல மெல்ல இரண்டாவது அலையில் இருந்து மீண்டு வருகிறது.  ஆனால் தற்போது கேரளாவில் மட்டும் மீண்டும்  வைரஸ்தொற்றின் தாக்கம் பன்மடங்கு உயர தொடங்கியுள்ளது. 

இதுகுறித்து மத்திய அரசு தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளதுடன், கேரளாவில் மட்டும் மீண்டும் வியத்தகு வகையில் வைரஸ் தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது என்றும், கடந்த சில தினங்களாக நாளொன்றுக்கு குறைந்தது 22 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருவதாகவும், அதில் நேற்று மட்டும்  131 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தகவல் வெளியிட்டுள்ளது. அதாவது நாட்டின் ஒட்டுமொத்த  நோய் பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 99 ஆயிரத்து 436 ஆக இருந்து வரும் நிலையில், அதில் கேரளாவில் மட்டும் 1 லட்சத்து 45 ஆயிரத்து 776 என நோய் பாதிப்பு உள்ளது. அதாவது ஒட்டுமொத்த நாட்டின் நோய் பாதிப்பு எண்ணிக்கையில் 50% கேரள மாநிலத்திலிருந்து பதிவாகியுள்ளது. இது மற்ற மாநிலங்களுக்கும் பரவும் கூடும் என்பதால், பிற மாநில அரசுகளும் எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய  அரசு அலர்ட் செய்துள்ளது. கேரளாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 22 ஆயிரத்து 56 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கேரளாவில் என்னதான் நடக்கிறது? ஏன் அங்கு நோய்த்தொற்று அதிகரிக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்ய தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து 6 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு கேரளாவுக்கு அனுப்பியுள்ளது. அந்தக் குழு நோய் தாக்கத்திற்கான காரணம், நோய்த் தடுப்புக்கு மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? என்பன உள்ளிட்டவைகளை ஆராய்வதுடன், நோய் கட்டுப்படுத்த தேவையான ஆலோசனைகளையும் வழங்க உள்ளது.

கேரளாவில் இந்த அளவிற்கு நோய்த் தொற்று பரவ காரணம் என்ன.?

அம்மாநிலத்தில் தினசரி கொரோனா பரிசோதனை உயர்ந்தப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. நேற்று மட்டும்  1 லட்சத்து 49 ஆயிரத்து 534 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் அங்கு நோய்த் தொற்று உள்ளவர்களின் எண்ணிக் கையும் அதிகமாக பதிவாகிறது. தமிழகத்திலும் அன்றாடப் தொற்று பதிவு அதிகரித்து வருவது குறித்து, விளக்கமளித்துள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சு, தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 1 லட்சத்து 43 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், நோய் பாதிப்பு எண்ணிக்கை உயர்கிறது என கூறியுள்ளார்.  

நேற்று மட்டும் 1,43,310 சோதனைகள் நடத்தப்பட்டதில் 1767 க்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஒட்டுமொத்த நாட்டிலும் கேரளாவே குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி பதிவாகியுள்ள மாநிலமாக கண்டறியப்பட்டுள்ளது. நாடு இரண்டு அலைகளை எதிர்கொண்டுள்ள நிலையிலும், தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையிலும் நாட்டில் எந்த அளவிற்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருக்கிறது என்பதை கண்டறிவதற்கான செரோ சர்வே என்ற ஆய்வு  (நான்காவது கட்ட சோதனை) ஐ.சி.எம்.ஆர் நடத்தியது.

இதில் இந்தியாவில் 70 மாவட்டங்களில் அதிகம் நோய் பாதித்த பகுதிகளை தேர்வு செய்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகளின்படி அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் 79% பேருக்கும், நாட்டிலேயே குறைந்த அளவில் கேரளாவில் 44.4 சதவீதம் பேருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பது  கண்டறியப்பட்டுள்ளது. (தமிழகத்தைப் பொறுத்தமட்டில் 69.2 சதவீதம் பேருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது) இந்த சோதனை மூலம் மொத்தமாக 70 சதவீத இந்தியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பது தெரிய வந்துள்ளது. 

தற்போது கேரளாவில் மந்தை நோய் எதிர்ப்பு சக்தி, அதாவது சமூக நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைந்த அளவில் இருப்பதே மீண்டும் அங்கு வைரஸ் தொற்று அதிகரிப்பதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. (இந்தியாவில் மூன்றில் ஒரு பகுதியினர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்) இந்நிலையில், இது குறித்து தெரிவித்துள்ள கேரள மாநில நிபுணர் குழு உறுப்பினர் டாக்டர் அனீஸ், கேரளாவின் தேசிய சராசரியைவிட விகிதாச்சாரத்தில் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போட்டுள்ளது, ஆனால் மந்தை நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த அளவில் இருப்பதால், கேரளாவுக்கு அதிக தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். 
 

click me!