வீடு இடிந்து 9 பேர் பலி… உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்தார் மு.க.ஸ்டாலின்!!

By Narendran SFirst Published Nov 19, 2021, 12:43 PM IST
Highlights

#CMStalin | வேலூர் பேரணாம்பட்டில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் உள்பட் 9 பேர் உயிரிழந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

வேலூர் பேரணாம்பட்டில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் உள்பட் 9 பேர் உயிரிழந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பேரணாம்பட்டு ரங்கம்பேட்டை கானாற்றில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் குல்ஷார் வீதி , அஜிஜியா வீதிகளில் வசித்து வந்த மக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் அந்த பகுதியில் உள்ள பள்ளிவாசல், மசூதி மற்றும் பள்ளிக் கூடங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். இந்த நிலையில் சிலர் தங்கள் வீடுகளின் மாடிகளில் தங்கியுள்ளனர். அஜிஜியா வீதியிலுள்ள யுனானி வைத்தியர் மர்கூப் அஸ்லாம் அன்சாரி என்பவருடைய மனைவி அனிஷா பேகம் மற்றும் குடும்பத்தினர் வசித்து வந்த வீட்டின் மாடியில் ஆசிரியை கவுசர் மற்றும் அவரது மகள் மகபூப் தன்ஷிலா ஆகியோர் வசித்து வந்தனர். இதற்கிடையில், நேற்று இரவு பலத்த மழை பெய்து தெருவில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழையின் காரணமாக வாடகைக்கு குடியிருந்த கவுசர் மற்றும் அவருடைய மகள் ஆகியோர் அனுஷா பேகம் வீட்டில் வந்து தங்கினர். மேலும் அக்கம் பக்கத்தினரும் அந்த வீட்டிற்கு வந்து தங்கி உள்ளனர். குழந்தைகள் உள்பட மொத்தம் 13 பேர் அந்த வீட்டில் நேற்று இரவு தங்கியுள்ளனர். இந்நிலையில், கனமழை காரணமாக அந்த வீடு இன்று அதிகாலை 6 மணிக்கு திடீரென முழுவதுமாக இடிந்து விழுந்தது.

இதனால், வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கினர். தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  அப்போது ஒன்பது பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. வீட்டில் இருந்த அனிஷாபேகம், ரோகிநாஸ், கௌசர், தன்சிலா, அபிரா, மனுல்லா, தாமேத், அப்ரா, மிஸ்பா பாத்திமா ஆகிய 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிந்தனர்.  அந்த குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இடிபாடுகளில் மாயமான 3 பேரை மீட்பு படையினர் தேடி வருகின்றனர். இதனிடையே வேலூர் மாவட்டத்துக்கு 2 தேசிய பேரிடர் மீட்புக்குழு விரைந்துள்ளது. குடியாத்தம் செம்பள்ளி கிராமத்தில் மழைநீர் சூழ்ந்ததால் தவித்து வரும் 230 பேரை மீட்கவும் ஒரு குழு சென்றுள்ளது.

பேரணாம்பட்டு அருகே வீடு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கவும் ஒரு குழு சென்றுள்ளது. ஒரு குழுவிற்கு தலா 20 பேர் வீதம் 40 பேர் தற்போது வேலூர் மாவட்டத்துக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் பேரணாம்பட்டில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் உள்பட் 9 பேர் உயிரிழந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கனமழையால் வீடு இடிந்து 5 பெண்கள் 4 குழந்தைகள் இறந்த செய்தி கேட்டு வருத்தம் அடைந்ததாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமாக வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

click me!