5 முன்னாள் அமைச்சர்களுக்கு குறி... ஜெ.,வை சிறையில் தள்ளிய நல்லம நாயுடுவை களம் இறக்கும் ஸ்டாலின்..!

By Thiraviaraj RMFirst Published Aug 7, 2021, 2:16 PM IST
Highlights

நல்லம நாயுடு... தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் எஸ்.பி-யாக இருந்தபோது இவர் போட்ட வலுவான அடித்தளம்தான் ஜெயலலிதாவையும், அவரின் கூட்டாளிகளையும் சிறைக்குள் தள்ளியது.
 

நல்லம நாயுடு... தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் எஸ்.பி-யாக இருந்தபோது இவர் போட்ட வலுவான அடித்தளம்தான் ஜெயலலிதாவையும், அவரின் கூட்டாளிகளையும் சிறைக்குள் தள்ளியது.

கடந்த 1996ம் ஆண்டு ஜெயலலிதாவிற்கு எதிரான ஊழல் மற்றும் லஞ்ச புகாரிகளை விசாரிக்கும் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் நல்லம நாயுடு. ஜெயலலிதாவை கைது செய்து ஆறே மாதத்திற்குள் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகையையும் இவர் தாக்கல் செய்தார். இது தான் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று தனது முதலமைச்சர் பதவியையே இழக்க காரணமாக இருந்தது. 1997ம் ஆண்டே நல்லம நாயுடு ஓய்வு பெற்றுவிட்டாலும் திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் இவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படும்.

இதன் காரணமாக ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை சுமார் 20 வருடங்களாக கண்காணித்து வந்ததுடன் பல்வேறு சட்ட போராட்டங்களையும் நடத்தியவர் நல்லம நாயுடு. ஜெயலலிதாவிற்கு சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கிய நீதிபதி மைக்கேல் டி குன்ஹா, தனது தீர்பபில் நல்லம நாயுடுவின் குற்றப்பத்திரிகையை பல முறை சுட்டிக்காட்டியிருந்தார். அந்த வகையில் லஞ்ச மற்றும் ஊழல் வழக்குகளில் நல்லம நாயுடுவுன் ஆலோசனைகளை பெற ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த வாரம் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமி வீட்டிற்கே அழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்திய நிலையில் தான் லஞ்ச ஒழிப்புத்துறையின் மிக முக்கிய அதிகாரி நல்லம நாயுடுவின் பெயர் கோட்டை வட்டாரத்தில் மறுபடியும் அடிபட ஆரம்பித்துள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தில் கொடுத்த வாக்குறுதிகளின் அடிப்படையில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி தொடங்கி கடைநிலையில் இருந்த அமைச்சர்கள் வரை அனைவரது கடந்த கால செயல்பாடுகளையும் லஞ்ச ஒழிப்புத்துறை தோண்டி எடுக்க ஆரம்பித்துள்ளதாக சொல்கிறார்கள். முதற்கட்டமாக எடப்பாடி பழனிசாமி, எஸ்பி வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், ராஜேந்திர பாலாஜி ஆகிய ஐந்து பேரை குறி வைத்திருப்பதாக கூறுகிறார்கள்.

இவர்கள் மீதான புகார்கள் மற்றும் அதற்கான ஆதாரங்களுடன் தான் லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குனர் கந்தசாமி கடந்த வாரம் முதலமைச்சரை சந்தித்ததாக கூறுகிறார்கள். அப்போது தான் நல்ல நாயுடு குறித்து ஸ்டாலின் சில தகவல்களை கந்தசாமியிடம் கூறியதாக சொல்கிறார்கள். அந்த வகையில் முன்னாள் அமைச்சர்கள் மீதான நடவடிக்கைகளை தொடங்கும் முன் நல்லம நாயுடுவின் ஆலோசனைகளை ஸ்டாலின் பெற உள்ளதாக கூறுகிறார்கள்.

ஜெயலலிதா போன்ற மக்கள் செல்வாக்குள்ள தலைவரின் அரசியல் வாழ்வு அஸ்தமனமாக காரணமாக இருந்த ஒரு அதிகாரியை வைத்து தங்களுக்கு ஸ்கெட்ச் போடப்படுவதை எடப்பாடி பழனிசாமி உணர்ந்தே வைத்திருக்கிறார் என்கிறார்கள். என்ன தான் அவர் வெளியே துணிச்சலாக இருந்தாலும் கடந்த பத்து வருடங்கள் அதிகாரத்தில் இருந்தபோது செய்த சில காரியங்கள் எடப்பாடி பழனிசாமியை மட்டுமல்ல அமைச்சர்களையும் கதிகலங்க வைத்துள்ளது. 

click me!