5 கார்கள்... 10 போலீஸ் டிரைவர்கள்... ஓய்வு பெற்ற பிறகும் ஓஹோ வாழ்க்கை... கதறும் காவல்துறை..!

By Thiraviaraj RMFirst Published Jul 27, 2021, 11:59 AM IST
Highlights

அதிகாரிகளின் வீடுகளிலும், தோட்டத்தில் வேலை செய்ய நான்கு முதல் பத்து போலீசார் வரை பயன்படுத்தப்படுகின்றனர். 

போலீஸ் உயரதிகாரிகளுக்கு அரசு பல சலுகைகளை வழங்குகிறது. அவர்களில் சில சலுகைகளை சிலர் எல்லைமீறி பயன்படுத்திக் கொள்வது வழக்கம். அப்படித்தான் ஒரு அதிகாரி, ஓய்வு பெற்ற பின்னரும் அரசு வாகனங்கள் ஒன்றல்ல, இரண்டல்ல, 10 வாகனங்களை பயன்படுத்தி வந்துள்ளார் என்று குமுறுகின்றனர் காவல்துறையினர். பொதுவாக டிஐஜிக்கள், டிஜிபிக்கள் முதலான ஐபிஎஸ் அதிகாரிகள் 2 முதல் 3 க்கும் மேற்பட்ட வாகனங்களை பயன்படுத்துவது வழக்கம்.

 அதிகபட்சமாக 5 வாகனங்கள் ஒதுக்கப்படுகின்றன. இவற்றை இயக்குவதற்கு 2 ஷிப்ட் அடிப்படையில் டிரைவராக போலீசாரை பயன்படுத்தப்படுகின்றனர். அதிகாரிகளின் வீடுகளிலும், தோட்டத்தில் வேலை செய்ய நான்கு முதல் பத்து போலீசார் வரை பயன்படுத்தப்படுகின்றனர். பதவியில் இருக்கும்போது இந்த வசதிகளை அனுபவிக்கும் அதிகாரிகள் ஓய்வுக்குப் பிறகு இந்த வசதி வாய்ப்புகளை விட மனமில்லாமல் காவல்துறையில் இருந்து 5 வாகனங்கள் ஒதுக்க வேண்டும் என்று பெற்றுக் கொள்கின்றனர்.

இவைகளைப் பயன்படுத்த தலா 2 டிரைவர்கள் வீதம் போலீசாரும், ஆர்டர்லிக்களாக 4 போலீசாரை தங்கள் வாழ்நாள் வரை பயன்படுத்துகின்றனர். இப்படி 500 முதல் 750 போலீசாரும், 300க்கும் அதிகமான வாகனங்களும் ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஓய்வு பெற்ற திமுக ஆதரவு டிஜிபி ஒருவர் ஓய்வுக்குப் பிறகும் 10 வாகனங்களை தனது சொந்த உபயோகத்துக்காக பயன்படுத்தி வந்தார். இதை அறிந்த தலைமையிட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து 6 வாகனங்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டனர். இதேபோல் 10 ஆண்டுகளுக்கு முன்பாக பணியாற்றிய சில அதிகாரிகள் வீடுகளிலும் இப்போது இரண்டு வாகனங்களும் போலீசாரும் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். ஓய்வுபெற்ற அதிகாரிகளின் நேர்மையான அதிகாரிகளை தவிர பெரும்பாலான அதிகாரிகளின் வீடுகளில் இரண்டுக்கும் அதிகமான வாகனங்கள் இப்போதும் பயன்படுத்தப்படுகிறது.

அதேநேரம் சென்னை மாநகரில் உள்ள 135 க்கும் அதிகமான குற்றப்பிரிவு ஸ்டேஷன்களில் பணியாற்ற போதுமான காவலர்கள் இல்லாமலும், பல இன்ஸ்பெக்டர்களுக்கு ஜீப் உட்பட வாகனங்கள் இல்லாமல் பைக்கில் சென்று வருகின்றனர். மேலும் பல குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் களுக்கு பயன்படுத்தப்படும் ஜீப்புகள் குறைந்தபட்சம் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்ட பழைய ஜீப்புகள் தான். இவை பெரும்பாலும் அடிக்கடி ரிப்பேராகி இன்ஸ்பெக்டர்கள் தங்கள் சொந்த செலவில் பராமரிக்கின்றனர். ஆனால், ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு புத்தம்புதிய ஜீப்களை அதிகாரிகள் அனுப்பி வைத்துவிடுகின்றனர். எனவே ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கூடுதல் வாகனங்களை திருப்பி பெறுவதுடன் தேவைக்கு அதிகமாக பயன்படுத்தப்படும் போலீசார் டிரைவர்களை ஸ்டேஷன்களுக்கு அனுப்பினால் குற்றங்களை கண்டுபிடிக்கவும் ரோந்து பணிகளுக்கு பயன்படுத்த முடியும். இதன் மூலம் எங்களுக்கு பணி சுமையும் குறையும் என்கிறார்கள் சில போலீஸ் அதிகாரிகள்.

click me!