44 நாட்கள் அமைதி... போயஸ் கார்டனுக்கு படையெடுத்த சசிகலா..!

By Thiraviaraj RMFirst Published Mar 24, 2021, 4:13 PM IST
Highlights

இதுவரை போயஸ் கார்டன் பக்கம் போகாமிருந்த சசிகலா சரியாக 44 நாட்கள் கழித்து அங்கு வேதா நிலையத்தின் வழியாக சென்றுள்ளார்.

சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கி விட்டு இறை தியானத்தில் மூழ்கி விட்டார். கோயில் கோயிலாக சென்று வந்த அவர் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு போயஸ் கார்டனுக்கு இன்று  சென்றுள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு வருடங்கள் சிறைத் தண்டனையை முடித்துவிட்டு 2021 பிப்ரவரி 8 ஆம் தேதி சென்னை வந்த அவர் தி.நகர், அபிபுல்லா சாலையில் உள்ள இளவரசி மகள் கிருஷ்ணப்ரியாவுக்கு சொந்தமான வீட்டில் தங்கி இருந்தார். திடீரென மார்ச் 3ஆம் தேதி அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்கப் போவதாக அறிவித்தார். எனினும் டி.டி.வி.தினகரன் கட்சிப் பணிகளில் தீவிரமாகச் செயல்பட்டுவந்தார்.

தமிழகம் வந்த ஐந்து வாரங்களுக்குப் பிறகு குல தெய்வத்தை வணங்குவதற்கு கடந்த 17-ம் தேதி தஞ்சாவூர் சென்ற சசிகலா, நடராஜன் நினைவு இல்லம், அவரது சகோதரர்கள் பேரப்பிள்ளைகளின் காதணி விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தார். பின்னர் கணவர் நடராஜன் சமாதிக்குச் சென்று மரியாதை செலுத்திவிட்டு வீடு வந்தார். தஞ்சையிலிருந்து 19ஆம் தேதி சென்னைக்கு வந்த சசிகலா இன்று போயஸ் கார்டனுக்கு போகத்திட்டமிட்டார்.

அதன்படி இன்று மார்ச் 24ஆம் தேதி, காலையில் 6.30 மணிக்கு அபிபுல்லா சாலையிலிருந்து புறப்பட்டு, போயஸ் கார்டனில் அமைந்துள்ள விநாயகர் கோயிலில் அவர் சாமி தரிசனம் செய்தார். பின்னர் ஜெயலலிதாவுடன் தான் வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டு வாசல் வழியாக சென்றார். போயஸ் கார்டன் ஜெ‌.,வீடு அரசு நினைவு இல்லமாக மாற்றப்பட்டதற்கு பிறகு அங்கு பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்நிலையில் வேதா நிலையம் வீட்டைப் பார்த்தபடி பின் பக்கம் வந்தவர், இடப்பக்கம் உள்ள சிவன் கோயிலில் தரிசனம் செய்தார். தனக்காக புதியதாகக் கட்டப்பட்டுவரும் பங்களாவை வெளியிலிருந்தபடி மேலேயும் கீழேயும் பார்த்துவிட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளார் சசிகலா. இதுவரை போயஸ் கார்டன் பக்கம் போகாமிருந்த சசிகலா சரியாக 44 நாட்கள் கழித்து அங்கு வேதா நிலையத்தின் வழியாக சென்றுள்ளார்.

click me!