40 ஆயிரம் குடும்பங்களின் தலையில் விழுந்த இடி.. முதல்வர் ஸ்டாலினை மன்றாடிய ஓபிஎஸ்.

By Ezhilarasan BabuFirst Published Sep 14, 2021, 12:34 PM IST
Highlights

போர்டு நிறுவனத்தின் இந்த நடவடிக்கை காரணமாக சுமார் 4000 நேரடி தொழிலாளர்களின் எதிர்காலம் கிட்டத்தட்ட நாற்பதாயிரம் மறைமுக தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. 

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும் நிலைத்த வேலைவாய்ப்புகளை அளிப்பதிலும், தொழில் முனைவோர் மேம்பாடு அடைவதிலும் நாற்றங்காலாக விளங்குவது தொழில்துறை மற்றும் அதன் தொடர்புடைய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை என்று சொன்னால் மிகையாகாது. இந்த துறைகளை ஊக்குவிக்கும் தொழில் அமைதியை உருவாக்கவும் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறார்கள்.

தொழில்கள் வளர்ந்தால் தான் தொழிலாளர்கள் வாழமுடியும் என்பதை அடிப்படையாகக் கொண்டு புதிது புதிதாக தமிழ்நாட்டில் தொழில்களை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான போர்டு நிறுவனம் விற்பனை பாதிப்பு மற்றும் தொடர் இழப்பு காரணமாக சென்னை மறைமலைநகரில் உள்ள தொழிற்சாலையை அடுத்த ஆண்டு இரண்டாம் காலாண்டில் மூடுவதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு இது பேரிடியாக அமைந்துள்ளது, கடந்த ஒரு வாரமாக உற்பத்தி நிறுத்தப்பட்டிருப்பதாகவும் மூலப்பொருட்கள் பற்றாக்குறை என்று கூறப்பட்டாலும் நிறுவனத்தை நிரந்தரமாக மூடுவதற்கான தந்திரம்தான் இது என்றும், எப்பொழுது உற்பத்தி தொடங்கப்படும், எப்பொழுது தொழிலாளர்கள் வேலைக்கு திரும்ப வேண்டும் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை என்றும் தொழிலாளர்கள் தரப்பில் கூறப்பட்டதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

அண்மையில் ஏற்பட்ட புதிய உடன்படிக்கை ஓராண்டுக்கு மேற்கொள்ளப்பட்டபோது சந்தேகமடைந்து இதுகுறித்து கேள்வியை எழுப்பியதாக சிஐடியு தொழிற்சங்கம் பத்திரிக்கைக்கு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவர் தொழிற்சாலையை மூடுவது என்பது கடினமான முடிவு தான். எங்களுக்கு இதைத் தவிர வேறு முடிவு தெரியவில்லை, பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டும் உள்நாட்டில் உற்பத்தி செய்யும் வாகனங்களால் நீண்ட காலத்திற்கு லாபமீட்டும் பாதையை தங்களால் அடைய முடியவில்லை என்று தெரிவித்து இருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது.

போர்டு நிறுவனத்தின் இந்த நடவடிக்கை காரணமாக சுமார் 4000 நேரடி தொழிலாளர்களின் எதிர்காலம் கிட்டத்தட்ட நாற்பதாயிரம் மறைமுக தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இது மட்டுமல்லாமல் ஃபோர்டு மோட்டார் நிறுவனத்திற்கு மூலப்பொருட்களை விநியோகித்து வரும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் நிலைமையும் கேள்விக்குறியாகி உள்ளதாகவும் கிட்டத்தட்ட நான்காயிரம் சிறு குறு நிறுவனங்கள் மூடும் அபாயம் உள்ளதாகவும் பத்திரிக்கையில் செய்தி வந்துள்ளது. இதனை தடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் மாநில அரசுக்கு உண்டு. 

எனவே நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்படையக் கூடிய இந்த பிரச்சனையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உடனடியாக தலையிட்டு இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி போர்டு மோட்டார் நிறுவனம் தொடர்ந்து சென்னையை அடுத்துள்ள மறைமலை நகரில் இயங்கவும், தொழிலாளர்கள் தொடர்ந்து அங்கு பணிபுரியவும்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். என தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.

 

click me!