பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை 40 சதவீதமா உயர்த்தணும்... கொமதேக ஈஸ்வரன் அதிரடி கோரிக்கை..!

By Asianet TamilFirst Published Dec 1, 2020, 8:53 PM IST
Highlights

பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருக்கிற அனைத்து சாதிகளுக்கான இட ஒதுக்கீட்டை 40 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
 

அரசு வேலைவாய்ப்பு, கல்வியில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று பாமக சார்பில் இன்று போராட்டம் நடத்த முடிவானது. அப்போராட்டத்தில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னையில் ஆயிரக்கணக்கான பாமகவினர் குவிந்தனர். அவர்களை, சென்னைக்குள் நுழைய விடாமல் போலீஸார் தடுத்தனர். இதனையடுத்து பெருங்களத்தூரில் பாமகவினர் சாலை மறியலிலும் ரயில்கள் மீது கல்வீசியும் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருக்கிற அனைத்து சாதிகளும் ஒன்றிணைந்து மொத்த ஜனத்தொகையாக 55 சதவீதம் இருக்கிறார்கள். தமிழகத்தின் 55 சதவீத மக்களுக்கான இட ஒதுக்கீடாக 26.5 சதவீதம் வழங்கப்படுகிறது. கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் தமிழகத்தில் அதிகமான பாதிப்பை சந்தித்து கொண்டிருப்பது பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருக்கின்ற சாதிகளை சார்ந்தவர்கள்தான்.


பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருக்கிற சாதிகள் அனைத்தும் ஒன்றிணைந்து போராட வேண்டிய சூழ்நிலை நெருங்கி கொண்டிருக்கிறது. பாமக வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டில் இருந்துதான் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீதம் உள் ஒதுக்கீடாக ஒதுக்கப்பட்டது. இவ்வாறு கொடுக்கப்பட்ட உள் ஒதுக்கீடுகளால்தான் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 26.5 சதவீதமாக இன்றைக்கு இருக்கிறது. 55 சதவீத மக்களுக்கான 26.5 சதவீதமாக இருக்கிற இட ஒதுக்கீட்டை 40 சதவீதமாக மாற்றினால்தான் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருக்கிற சாதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் ஓரளவுக்காவது வாய்ப்பு கிடைக்கும்.

 
பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருக்கிற சாதிகள் ஒன்றிணைந்து களத்திற்கு வந்து போராடினால்தான் பிற்படுத்தப்பட்டோருக்கான உரிமை கிடைக்கும் என்றால் அதற்கும் நாங்கள் தயாராகதான் இருக்கிறோம். அதனால் அரசு பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கான இட ஒதுக்கீட்டை 40 சதவீதமாக உயர்த்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று அறிக்கையில் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். 

click me!