பாமகவின் போராட்டம் எதிரொலி... கூட்டணி கட்சிக்கு மரியாதை கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி..!

By Asianet TamilFirst Published Dec 1, 2020, 8:36 PM IST
Highlights

சாதி வாரியான தற்போதைய நிலவரப்படியான புள்ளிவிவரங்களை சேகரிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் உரிய தரவுகளை சேகரித்து, அறிக்கை சமர்ப்பிக்க அதற்கென பிரத்யேக ஆணையம் ஒன்று அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
 

அரசு வேலைவாய்ப்பு, கல்வியில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று பாமக சார்பில் இன்று போராட்டம் நடத்த முடிவானது. அப்போராட்டத்தில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னையில் ஆயிரக்கணக்கான பாமகவினர் குவிந்தனர். அவர்களை, சென்னைக்குள் நுழைய விடாமல் போலீஸார் தடுத்தனர். இதனையடுத்து பெருங்களத்தூரில் பாமகவினர் சாலை மறியலிலும் ரயில்கள் மீது கல்வீசியும் தாக்குதலில் ஈடுபட்டனர். 
இந்நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழகத்தில் தனி ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,  “தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பினை பெற்று தந்து, தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் நீங்கா இடம் பிடித்து, “சமூக நீதி காத்த வீராங்கனை” என்று அனைவராலும் ஜெயலலிதா போற்றப்படுகிறார். தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பல்வேறு காலக்கட்டங்களில் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.
அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் பயன் அனைத்து பிரிவினருக்கும் சென்றடைவதை அரசு உறுதிபடுத்த வேண்டியுள்ளது. மேலும், 69 சதவீத இட ஒதுக்கீடு சம்பந்தமான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இவ்வழக்கையும் எதிர்கொள்ள இத்தகைய புள்ளி விபரங்கள் தேவைப்படுகின்றன. இக்கோரிக்கைகளை நிறைவேற்ற தற்போதைய காலக்கட்டத்தில் உள்ள சாதிவாரியான அளவிடக்கூடிய முழுமையான புள்ளிவிவரங்கள் அவசியம் தேவைப்படுகிறது. எனவே, தமிழ்நாடு முழுவதும் சாதிய அடிப்படையிலான புள்ளிவிவரத்தை சேகரிப்பதால் மட்டுமே முழு தகவல் கிடைக்கப் பெறும். 
சாதி வாரியான தற்போதைய நிலவரப்படியான புள்ளிவிவரங்களை சேகரிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் உரிய தரவுகளை சேகரித்து, அறிக்கை சமர்ப்பிக்க அதற்கென பிரத்யேக ஆணையம் ஒன்று அமைக்கப்படும். ஜெயலலிதா சமூக நீதி காப்பதில் எந்த அளவிற்கு உறுதியாக இருந்தார் என்பதை நாடறியும். எனவே, ஜெயலலிதா வழியில் செயல்படும், இவ்வரசும் அதே உறுதியில் செயல்பட்டு சமூக நீதியை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்” என்று அறிக்கையில் எடப்பாடி பழனிச்சாமி  தெரிவித்துள்ளார்.

click me!