4 தொகுதி இடைத்தேர்தல்... பரிசுப்பெட்டி சின்னத்திற்கு சிக்கல்... நீதிமன்றத்தை நாடிய டி.டி.வி..!

By vinoth kumarFirst Published Apr 23, 2019, 6:01 PM IST
Highlights

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும், அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் டிடிவி.தினகரன் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 


4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும், அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் டிடிவி.தினகரன் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

அதிமுக துணைப் பொதுசெயலாளராக இருந்த டி.டி.வி.தினகரனை அக்கட்சியின் தற்போதைய ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் அதிரடியாக நீக்கம் செய்தனர். இதையடுத்து அமமுக கட்சியை ஆரம்பித்து பொதுச்செயலாளராக சசிகலாவும், துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரனும் பொறுப்பு வகித்து வந்தனர். ஆகையால் எப்படியும் அதிமுக தங்கள் வசம் வந்துவிடும் என எதிர்பார்த்த அவர்கள் அமமுகவை கட்சியாக பதிவு செய்யாமல் இருந்து வந்தார். 

இதையடுத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு ஜெயலலிதாவை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று தமிழக அரசியலை திரும்பி பார்க்க வைத்தார். இதைத்தொடர்ந்து தற்போது நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிட அதே குக்கர் சின்னத்தை டிடிவி. தினகரன் தேர்தல் ஆணையத்தில் கோரினார். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் தரப்பில் பதிவு செய்யப்படாத கட்சிக்கு சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக கூறியது. 

மேலும் அமமுக கட்சி வேட்பாளர்கள் சுயேட்சை வேட்பாளர்களாக கருதப்படுவார்கள். ஆகையால் அவர்களுக்கு தனித்தனி சின்னம் மட்டுமே ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக கூறியது. ஆனாலும் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்ததால் அமமுகவுக்கு பரிசுபெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டது. மேலும் நீதிமன்ற தீர்ப்பில் தற்காலிகமாக மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் மட்டும் பரிசுப்பெட்டி சின்னத்தை பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளது. ஆனால் வருகிற 4 சட்டமன்ற இடைத்தேர்தலில் பரிசுப்பெட்டி சின்னத்தை பயன்படுத்த முடியாத நிலைக்கு டிடிவி.தினகரன் தள்ளப்பட்டிருந்தார். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு அமமுகவை கட்சியாக தேர்தல் ஆணையத்தில் டிடிவி.தினகரன் பதிவு செய்தார். 

இந்நிலையில் மே 19-ம் தேதி திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கு அமமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். இந்த 4 தொகுதி இடைத்தேர்தல்களிலும் பரிசுப் பெட்டியையே சின்னமாக ஒதுக்கக் கோரி டிடிவி. தினகரன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

click me!