ஆறாண்டுகளில் 3-வது மாஜி அமைச்சர் வேட்பாளராக அறிவிப்பு.. வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி வரிசையில் சி.வி.சண்முகம்

By Asianet TamilFirst Published May 26, 2022, 8:21 AM IST
Highlights

2016-இல் வெற்றி பெறாத இந்த இரு முன்னாள் அமைச்சர்களும் மாநிலங்களவைக்கு சென்று பின்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்கள். இதற்கான இடைத்தேர்தலில் திமுக அந்த இரண்டு இடங்களையும் கைப்பற்றியது. 

கடந்த 6 ஆண்டுகளில்  மூன்றாவது முறையாக அதிமுக சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் முன்னாள் தமிழக அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மாநிலங்களவைக்கு 15 மாநிலங்களில் 57 எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூன் 10-இல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது. இந்தத் தேர்தலில் தமிழகத்தில் இருந்து 6 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். ஒரு எம்.பி.யைத் தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. அந்த அடிப்படையில் தமிழக சட்டப்பேரவையில் 159 இடங்கள் திமுக கூட்டணிக்கு இருப்பதால் தேர்தலில் அக்கூட்டணிக்கு 4 இடங்கள் கிடைப்பது உறுதி. இதில் ஓரிடத்தை காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கியுள்ளது. எஞ்சிய 3 இடங்களுக்கு தஞ்சை கல்யாண சுந்தரம், கிரிராஜன், ராஜேஸ்குமார் ஆகியோரை வேட்பாளர்களாக திமுக தலைமை அறிவித்துவிட்டது.

அதிமுகவுக்கு இரண்டு எம்.பி.க்கள் கிடைப்பதும் உறுதியாகிவிட்டது. அதிமுகவில் வடக்கு மண்டலத்துக்கும் தெற்கு மண்டலத்துக்கும் எம்.பி. பதவியை ஒதுக்கலாம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் - இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் முடிவு செய்திருந்தார்கள். வடக்கு மண்டலத்தில் முன்னாள் அமைச்சர்களான ஜெயக்குமார், சி.வி. சண்முகம், வளர்மதி, கோகுல இந்திரா ஆகியோர் அந்தப் பதவியைப் பிடிக்க தீவிரம் காட்டி வருவதாக கூறப்பட்டது. குறிப்பாக வடக்கு மண்டலத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் - சி.வி.சண்முகம் இடையே போடி பலமாக இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களை ஓபிஎ - ஈபிஎஸ் நேற்று இரவு அறிவித்தனர். வடக்கு மண்டலத்திலிருந்து விழுப்புரம் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகமும் தெற்கு மண்டலத்தில் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அதிமுக செயலாளர் தர்மர் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர்.

கடந்த ஆறு ஆண்டு காலத்தில் மாநிலங்களவைக்குப் போட்டியிடும் மூன்றாவது முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ஆவார். 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை மாநிலங்களவைக்கு அனுப்பினார் ஜெயலலிதா. இதேபோல் 2020-ஆம் ஆண்டில் நடந்த மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி. முனுசாமி நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார். இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர். 2016-இல் வெற்றி பெறாத இந்த இரு முன்னாள் அமைச்சர்களும் மாநிலங்களவைக்கு சென்று பின்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்கள். இதற்கான இடைத்தேர்தலில் திமுக அந்த இரண்டு இடங்களையும் கைப்பற்றியது. 

இதேபோல 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் தோல்வியடைந்த சி.வி.  சண்முகம், தற்போது மாநிலங்களவைக்கு அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவராது முழுமையாக 6 ஆண்டுகள் இந்தப் பதவியில் இருப்பாரா அல்லது 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வைத்திலிங்கம், கே.பி. முனுசாமி வரிசையில் சி.வி. சண்முகம் இணைவாரா என்பதை அறிய 4 ஆண்டுகாலம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.  
 

click me!