
அரபு நாடான குவைத்தில் 3 ஆயிரம் இந்தியர்கள் உள்ளிட்ட 7 ஆயிரம் ஊழியர்கள் உணவு, பணம் இன்றி தவித்து வருகின்றனர். அவர்களை பணிக்கு அமர்த்திய நிறுவனம் ஊதியம் தராததால், நாடு திரும்பமுடியாத சூழலில் தவித்து வருகின்றனர். இது தொடர்பாக இந்தியர்கள் சிலர் தங்களின் துயரங்களை வீடியோவில் பல்வேறு ஊடகங்களுக்கு பகிர்ந்துள்ளனர்.
கட்டுமான நிறுவனம்
குவைத்தில் உள்ள கராபி நேஷனல் என்ற கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றிய 7 ஆயிரம் ஊழியர்களுக்கு கடந்த ஒரு ஆண்டாக அந்த நிறுவனம் ஊதியம் தரவில்லை. இதில் 3 ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர். இதில் இந்தியர்கள் பலரின் விசா காலம் முடிந்த நிலையில், மிகப் பெரிய அபராதத் தொகையை அபராதமாக ெசலுத்தினால் மட்டுமே நாடு திரும்ப முடியும் என்ற நிலையில் தவித்து வருகின்றனர்.
தவிப்பு
தங்களின் நிறுவனத்திடம் இருந்து ஊதியம் பெற்றுத் தரக்கோரி இந்திய தூதரகத்திடமும், நிறுவனத்திடம் பல முறை பேச்சு நடத்தியும் பலன் இல்லை என்று ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் ஏராளமானோர் வேலையை உதறி, தொழிலாளர் முகாமில் பரிதாபமான நிலையில் தவித்து வருகின்றனர்.
திடீர் நெருக்கடி
இது குறித்து கராபி நேஷனல் நிறுவனம் தரப்பில் கூறுகையில், “ வேலையைவிட்டு நின்ற ஊழியர்களில் 10 பேர் கொண்ட குழுவுக்கு ஊதியத்தை கொடுத்து கணக்கு முடித்து வந்தோம். ஆனால், திடீரென ஏராளமானோர் பணியை விட்டு விலகியதால், பணத்தை அளிக்க முடியவில்லை’’ என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கராபி நேஷனல் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் முன், ஏராளமான ஊழியர்கள் பல நாட்களாக காத்திருக்கிறார்கள். பதாகைகளில் தங்களுக்கு ஊதிய நிலுவைத் தொகையை கொடுக்க வேண்டும் என்று எழுதி வைத்து கோஷமிட்டு காத்திருக்கின்றனர்.
அபராதத் தொகை
இதில் தமிழகத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் வீடியோவில் கூறுகையில், “ என் மனைவிக்கும், குழந்தைகளுக்கும் சாப்பாட்டுக்கு கூட பணம் அனுப்ப முடியவில்லை. கடந்த ஒரு ஆண்டாக ஒருபைசா கூட அனுப்பவில்லை. எங்களில் சிலரிடம் விசா இருந்தாலும், அதன் காலக்கெடு முடிந்துவிட்டதால், மிகப்பெரிய தொகையை அபராதமாக செலுத்தினால் மட்டுமே நாடு திரும்ப முடியும். ஒருவர் ரூ. 80 ஆயிரம் வரை அபராதம் செலுத்த வேண்டியது இருக்கும். எப்படி நான் செலுத்த முடியும்?’
கடந்த 7 நாட்களாக அலுவலகம் முன் அமர்ந்து இருக்கிறோம் எந்த தீர்வும் இல்லை. யாரும் எங்களை கண்டுகொள்ளவில்லை. நிதி மேலாளரிடம் கேட்டால், இன்னும் ஒருவாரம் ஆகும் என்று ஒவ்வொரு வாரமும் கூறுகிறார் என கண்ணீருடன் தெரிவித்தார்.
மற்றொரு ஊழியரோ இதே நிலை நீடித்தால் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொள்ள வேண்டியதுதான் என்று கண்ணீருடன் தெரிவித்தார்.
மறுப்பு
திருநெல்வேலியைச் சேர்ந்த கவுதம் போஸ் என்பவர் கூறுகையில், “ கராபி நேஷனல் நிறுவனம் எங்களின் பாஸ்போர்ட்டை கொடுக்க தொடர்ந்து மறுக்கிறது. வேறு நிறுவனத்துக்கு மாறப்போகிறேன் என்று கூறினாலும் அதற்கும் நிறுவனம் அனுமதி அளிக்க மறுக்கிறது’’ என்றார்.
உதவாத இந்திய தூதரம்
குவைத்தில் உள்ள மனித உரிமைகள் அமைப்பின் ஊழியர் ஆல்வின் ஜோஸ் கூறுகையில், “ மற்ற நாடுகள் தங்கள் நாட்டு மக்களுக்கு இதுபோன்ற துன்பம் வந்தால் அவர்களுக்கு, உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும். ஆனால், இந்திய தூதரகம் தனது சொந்த நாட்டு மக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை’’ என்றார்.