தளவாய் சுந்தரம் அடாவடியால் சிக்கல்: மூன்று அமைச்சர்கள் பதவி இழக்கும் அபாயம்!

First Published Apr 17, 2017, 10:03 AM IST
Highlights
3 ministers losing their posts due to thalavai sundaram


அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரைடு நடந்தபோது, அத்து மீறி நுழைந்து அதிகாரிகளை மிரட்டிய புகாரின் அடிப்படையில், 3 அமைச்சர்கள் மற்றும் தளவாய் சுந்தரம் மீது, 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் அவர்கள் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்று அஞ்சுவதால், சென்னை உயர் நீதி மன்றத்தில் இன்று முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

மேலும் உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ், கடம்பூர் ராஜு ஆகியோரின் அமைச்சர் பதவிக்கும், தளவாய் சுந்தரத்தின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவிக்கும் சிக்கல் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 7 ம் தேதி அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, தளவாய் சுந்தரம், அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ், கடம்பூர் ராஜு ஆகியோர் அத்துமீறி நுழைந்தனர்.

அத்துடன், வருமானவரி அதிகாரிகளை மிரட்டி, அங்கிருந்த சில ஆவணங்களை நைசாக எடுத்து வந்த தளவாய் சுந்தரம், அதை  விஜயபாஸ்கரின் டிரைவர் உதயகுமாரிடம் கொடுக்க, அவர் வேகமாக ஓடி வெளியில் வீசி எறிந்து விட்டார்.

அப்போது, வெளியில் இருந்த ஆதரவாளர்கள் அந்த ஆவணத்தை எடுத்து கிழித்து போட்டு விட்டனர். சிஆர் பிஎப் வீரர்கள் எவ்வளவோ முயன்றும், அந்த ஆவணத்தை கைப்பற்ற முடியாமல் போய்விட்டது.

இந்த நிகழ்வு பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானதுடன், சமூக வலைத்தளங்களிலும் வெளியாகின.

இதையடுத்து, அவர்கள் மீது அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது, மிரட்டியது, ஆவணங்களை கடத்தி சென்றது உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று வருமான வரி அதிகாரிகள் காவல் துறையில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில், 4  பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, அந்த நான்கு பேரும் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்று அஞ்சப்படுவதால், இன்று ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

இது ஒரு புறம் இருக்க, இந்த பிரச்சினை காரணமாக, உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ், கடம்பூர் ராஜு ஆகிய மூன்று பேரின் அமைச்சர் பதவிகளும், தளவாய் சுந்தரத்தின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவியும் பறிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அமைச்சர்களை, மத்திய அரசு கண்கொத்தி பாம்பாக கண்காணித்து வரும் நிலையில், மூன்று அமைச்சர்களும், தளவாய் சுந்தரமும் தாமாக சென்று வலையில் சிக்கிக் கொண்டது, அவர்களுக்கு  மிகவும் வசதியாக போய்விட்டது என்றே அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

click me!