"சசிகலா அணி பணத்தின் மூலம் அனைத்தையும் பெற நினைக்கிறது" - மாபா பாண்டியராஜன் காட்டம்

First Published Apr 17, 2017, 9:43 AM IST
Highlights
mafoi pandiyarajan talks about irattai ilai bribe issue


ஜெயலலிதா மறைவுக்கு பின் ஆர்கே நகர் தொகுதியில் கடந்த 12ம் தேதி இடைத் தேர்தல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இதில், சசிகலா அணி சார்பில் டிடிவி.தினகரனும், ஓ.பன்னீர்செல்வம் அணியில் மதுசூதனனும் போட்டியிட்டனர்.

ஆனால், இரு அணியினரும் இரட்டை இலை சின்னத்தை கேட்டு டெல்லியில் முகாமிட்டு இருந்தனர்.

இருதரப்பினருக்கும் இரட்டை இலை சின்னத்தை கொடுக்க முடியாத சூழலில், தேர்தல் ஆணையம் டிடிவி.தினகரனுக்கு தொப்பி, மதுசூதனனுக்கு மின் கம்பம் ஆகிய சின்னங்கள் ஒதுக்கியது.

முன்னதாக டெல்லியில் தங்கியிருந்த டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள், இரட்டை இலை சின்னம் பெற்று தருவதாக கூறி, சுகேஷ் சந்திரா என்பவர் ரூ.1.3 கோடி லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக டெல்லி ஓட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திராவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.30 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த மாபா பாண்டியராஜன் கூறியதாவது:-

நாங்கள் தான் உண்மையான அதிமுகவினர் என்பதை நிரூபித்து வருகிறோம். வாக்காளர்களுக்கு பணத்தை கொடுத்து தேர்தலில் வெற்றி பெற முயற்சித்தனர். ஆனால், தேர்தல் ரத்து செய்யப்பட்டுவிட்டது.

இரட்டை இலை சின்னம் இருந்தால் மட்டுமே அவர்களால் ஜெயிக்க முடியும். அவர்களை யாருக்கும் தெரியாது. இதனால், அந்த சின்னத்தை பெறுவதற்காகவே லஞ்சம் கொடுக்க முயன்றுள்ளனர்.

இதுகுறித்து ஏற்கனவே நாங்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளோம். அதுபற்றிய விசாரணை நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாகவே தற்போது சுகேஷ் சந்திரா சிக்கியுள்ளார்.

தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட வேண்டும். அப்போதுதான் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்கும். ஆனால், சசிகலா அணியினர் பணத்தை கொடுத்து அனைத்தையும் பெற முயற்சிக்கின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

click me!