ஓபிஎஸ்சுக்கு எதிராக ஸ்கெட்ச் போடும் 3 மாஜி அமைச்சர்கள்..! பரபரக்கும் அதிமுக உட்கட்சி அரசியல்..!

By Selva KathirFirst Published Jun 19, 2021, 9:17 AM IST
Highlights

ஓபிஎஸ் தரப்பு இதற்கு முட்டுக்கட்டை போடுவதாக சொல்லப்படுகிறது. இதனால் எரிச்சல் அடைந்த மூன்று முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமியை அவசரமாக சந்தித்து பேசியுள்ளனர். தொடர்ந்து கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஓபிஎஸ்சை உடனடியாக அதிமுகவில் இருந்து நீக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியதாகவும் இதை கேட்டு ஒரு கனம் இபிஎஸ் ஆடிப்போய்விட்டதாகவும் சொல்கிறார்கள். 

ஓபிஎஸ்சை அதிமுகவில் இருந்து நீக்காமல் அடுத்த கட்டத்திற்கு கட்சியை நகர்த்த முடியாது என்று எடப்பாடி பழனிசாமியிடம் மூன்று முன்னாள் அமைச்சர்கள் வலியுறுத்தியது தான் அந்த கட்சிக்குள் தற்போது மறுபடியும் புயலை கிளப்பியுள்ளது.

அதிமுகவை ஓபிஎஸ் இரண்டாக உடைத்த போது நிர்வாகிகள் யாரும் அவருடன் செல்லத் தயாராக இல்லை. அப்போது அமைச்சர்களாக இருந்தவர்களுடன் மோதலில் இருந்து எம்எல்ஏக்கள் சிலர், மாவட்டச் செயலாளர்கள் சிலர் ஓபிஎஸ் அணியில் இணைந்தனர். ஆனால் ஓபிஎஸ் – இபிஎஸ் இணைப்பிற்கு பிறகு தர்மயுத்தத்தால் அதிமுகவில் கட்சிப் பதவியை இழந்தவர்களுக்கு ஓபிஎஸ்சார் மறுபடியும் பதவியை பெற்றுக் கொடுக்க முடியவில்லை. ஏன் தன்னை நம்பி வந்த அமைச்சர் பாண்டியராஜனுக்கு முன்னதாக அவர் வகித்த பள்ளிக்கல்வித்துறை இலாக்காவை கூட ஓபிஎஸ்சால் பெற்றுத் தர முடியவில்லை.

இதன் பிறகு சுமார் 4 வருடங்கள் ஆட்சி நடைபெற்ற நிலையில் கட்சியிலும் இபிஎஸ் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது. நாடாளுமன்ற தேர்தல், இடைத் தேர்தல், சட்டசபை தேர்தல், கூட்டணி போன்ற விஷயங்களில் இபிஎஸ் தனி ஆவர்த்தனம் நடத்தினார். ஆனால் அவ்வப்போது இபிஎஸ் தரப்புக்கு குடைச்சல் குடுப்பதை மட்டுமே ஓபிஎஸ் தனது வழக்கமாக வைத்திருந்தார். டெல்லியில் பாஜக மேலிடத்துடன் நெருங்கிய தொடர்பு இருந்த காரணத்தினால் சில விஷயங்களில் ஓபிஎஸ்சை இபிஎஸ் அனுசரித்து சென்று கொண்டிருந்தார். ஆனால் கட்சி மற்றும் ஆட்சியை பொறுத்தவரை இபிஎஸ் நினைப்பது தான் நடந்து கொண்டே இருந்தது.

இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட அதிமுக எதிர்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது. சசிகலா மறுபடியும் அதிமுகவை கைப்பற்ற வியூகம் வகுத்து செயல்பட ஆரம்பித்துள்ளார். இந்த இக்கட்டான சூழலில் கட்சியை காப்பாற்றும் பொறுப்பை எடப்பாடி பழனிசாமி முழு மனதோடு செய்து வருகிறார். ஆனால் ஓபிஎஸ் நடவடிக்கை அப்படி இல்லை என்கிறார்கள். கட்சியின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் தனிப்பட்ட முறையில் தனக்கு என்ன லாபம் என்பதை ஓபிஎஸ் பார்ப்பதாகவும், கட்சிக்கு எது நல்லது என்று பார்ப்பதை விட தனக்கு எது நல்லது என்று அவர் கணக்கு போடுவதாகவும் புகார்கள் எழுந்தன.

இதன் காரணமாகவே எதிர்கட்சி தலைவர் தேர்வு தொடங்கி கொறடா தேர்வு வரை ஓபிஎஸ்க்கு கட்சிக்குள் ஆதரவு இல்லை என்று சொல்கிறார்கள. ஓபிஎஸ் எவ்வளவோ போராடியும் அவரது ஆதரவாளர் மனோஜ் பாண்டியனுக்கு கொறடா பதவியை வாங்க முடியவில்லை. மாறாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எதிர்கட்சி கொறடா ஆகியுள்ளார். ஆனால் இந்த முடிவை அதிமுக எடுப்பதற்குள் ஓபிஎஸ் கொடுக்கும் குடைச்சலால் கட்சிக்குள் சலசலப்பு, விரிசல் என்றெல்லாம் செய்திகள் வெளியாகிவிடுகின்றன. இதனிடையே தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக சசிகலாவிற்கு எதிராக அதிமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்ற எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.

விழுப்புரம் மற்றும் சேலத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் மற்ற மாவட்டங்களில் சசிகலாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் யோசிப்பதாக கூறுகிறார்கள். இதன் பின்னணியில் ஓபிஎஸ் இருக்கலாம் என இபிஎஸ் ஆதரவாளர்கள் சந்தேகப்படுவதாக  சொல்லப்படுகிறது. சசிகலாவிற்கு எதிராக மாவட்ட அதிமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அதிகாரப்பூர்வமாக அதிமுகவில் இருந்து எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. ஆனால் இபிஎஸ் தரப்பு மாவட்டங்களை தொடர்பு கொண்டு சசிகலாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுமாறு வலியுறுத்தி வருவதாக சொல்கிறார்கள்.

ஆனால் ஓபிஎஸ் தரப்பு இதற்கு முட்டுக்கட்டை போடுவதாக சொல்லப்படுகிறது. இதனால் எரிச்சல் அடைந்த மூன்று முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமியை அவசரமாக சந்தித்து பேசியுள்ளனர். தொடர்ந்து கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஓபிஎஸ்சை உடனடியாக அதிமுகவில் இருந்து நீக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியதாகவும் இதை கேட்டு ஒரு கனம் இபிஎஸ் ஆடிப்போய்விட்டதாகவும் சொல்கிறார்கள். ஆனால் தங்கள் வலியுறுத்தல் கோபத்தின் வெளிப்பாடு இல்லை என்றும், அவரை நீக்கினால் தான் அதிமுகவை அடுத்து ஆட்சிக்கட்டிலில் அமர வைக்க முடியும் என்றும் கூறி சில கருத்துகளை மூன்று பேரும் கூறியதாகவும், ஆனால் எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரத்தில் அமைதி காப்பதாகவும் சொல்கிறார்கள்.

click me!