பழம் சாப்பிடுவது பாஜக.. ஆனால் விதை நாங்க போட்டது..!

First Published Dec 23, 2017, 11:52 AM IST
Highlights
2G is the base for the digital india said kushboo


டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கான அடித்தளமே காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்ட 2ஜி திட்டம்தான் என காங்கிரஸ் தேசிய செய்தித்தொடர்பாளர் குஷ்பூ தெரிவித்துள்ளார்.

கடந்த 7 ஆண்டுகளாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு வந்த 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில், போதிய ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால், ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் அந்த வழக்கிலிருந்து விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பால், காங்கிரஸ் மற்றும் திமுக மீதான ஊழல் கறைகள் துடைக்கப்பட்டு தாங்கள் சுத்தமானவர்கள் என்பதை நிரூபித்துவிட்டதாக காங்கிரஸாரும் திமுகவினரும் கொண்டாடிவருகின்றனர். 

2011-ல் தமிழகத்தில் திமுக படுதோல்வி அடைந்ததற்கும், 2014 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததற்கும் 2ஜி முறைகேடு மிக முக்கிய காரணமாக திகழ்ந்தது. இந்நிலையில், 2ஜி வழக்கின் தீர்ப்பின்மூலம் தங்களின் மீது தவறு இல்லை என்பதை அடிப்படையாக வைத்து மத்தியில் காங்கிரஸும் தமிழகத்தில் திமுகவும் மீண்டும் ஆட்சியை பிடிக்க தற்போதே பணிகளை தொடங்கிவிட்டன.

இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் பிறந்தநாள் விழா சென்னை வேலப்பன் சாவடியில் நடந்தது. இதில் கலந்துகொண்ட காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளர் குஷ்பூ, 2ஜி வழக்கின் தீர்ப்பு மூலம் காங்கிரஸ் மற்றும் திமுக மீதான பொய் பிரசாரத்திற்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. 2019-ல் தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலினும் இந்தியாவின் பிரதமராக ராகுல் காந்தியும் அரியணை ஏறுவார்கள் என தெரிவித்தார்.

மேலும், தற்போது மத்திய பாஜக அரசு டிஜிட்டல் இந்தியா என கூறிவருகிறது. ஆனால் அதற்கு அடித்தளமே 2ஜி திட்டம்தான் என குஷ்பூ பெருமிதம் தெரிவித்தார்.
 

click me!