
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. இதற்காக வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ராணி மேரி கல்லூரியில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. திமுக சார்பில் மருது கணேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன் மற்றும் டி.டி.வி.தினகரன் சுயேட்சையாகவும் போட்டியிடுகின்றனர்.
நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் 77 சதவீத வாக்குகள் பதிவாகின.
இத்தேர்தலில் பதிவான வாக்குகள் சென்னை காமராஜர் சாலையில் அமைந்திருக்கும் ராணிமேரி கல்லூரியில் நாளை எண்ணப்படுகின்றன. இத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு இந்தக் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணிக்கையையொட்டி ராணி மேரி கல்லூரியில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக வாக்கு எண்ணிக்கை நடைபெறக்கூடிய பகுதியை மாவட்டத் தேர்தல் அதிகாரி திரு. கார்த்திகேயன், காவல்துறை ஆணையர் திரு.ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.