2ஜி வழக்கு! விரைவில் ஸ்டாலினுக்கு அமலாக்கத்துறை சம்மன்! விஸ்வரூபம் எடுக்கும் சாதிக் பாட்சா வாக்குமூலம்!

By Selva KathirFirst Published Dec 4, 2020, 12:11 PM IST
Highlights

2ஜி வழக்கில் கடந்த 2011ம் ஆண்டு ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்சா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விரைவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தும் என தகவல் வெளியாகியுள்ளது.
 

2ஜி வழக்கில் திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி ஆகியோர் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளதாக இதுநாள் வரை பலரும் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் 2014ம் ஆண்டு அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் அப்போது திமுக பொருளாளராக இருந்த மு.க.ஸ்டாலின் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. அதாவது 2ஜி வழக்கில் லஞ்சப் பணம் கைமாறிய விதம் மு.க.ஸ்டாலினுக்கு தெரிந்து அதனை அவர் மறைத்துள்ளார் என்கிற குற்றச்சாட்டில் ஸ்டாலின் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டிருந்தது.

 

அதாவது கடந்த 2011ம் ஆண்டு ஜனவரி 28 மற்றும் பிப்ரவரி 21ந் தேதி ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்சாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அப்போது, கலைஞர் தொலைக்காட்சிக்கு சுமார் 200 கோடி ரூபாய் வழங்கிய டிபி குரூப்ஸ் நிறுவனத்தின் நிர்வாக மேலாளர் ஷாகித் பல்வா சென்னையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததாக வாக்குமூலம் அளித்திருந்தார் சாதிக் பாட்சா. மு.க.ஸ்டாலின் வீட்டில் நடைபெற்ற இந்த சந்திப்பிற்காக பல்வாவை அங்கு தான் அழைத்துச் சென்றதாகவும் சாதிக் பாட்சா தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.

2010ம் ஆண்டு அப்போது துணை முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு தான் ஷாகித் பல்வாவை அழைத்துச் சென்றதாக கூறியுள்ள சாதிக் பாட்சா, அதன் பிறகு ஆ.ராசா அங்கு வந்ததாகவும் அமலாக்கத்துறையிடம் வாக்குமூலம் அளித்திருந்தார். மேலும் ஆ.ராசா – மு.க.ஸ்டாலின் – சாதிக் பால்வா  ஆகியோர் சந்தித்து பேசிக் கொண்டிருந்த போது தான் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்ததாகவும் சாதிக் பாட்சா அமலாக்கத்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருந்தார்.

இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் ஷாகித் பல்வாவின் டிபி குரூப் நிறுவனம் கலைஞர் டிவிக்கு சட்டவிரோதமாக 200 கோடி ரூபாய் வழங்கியது மு.க.ஸ்டாலினுக்கும் தெரிந்த நிலையில் அதனை அவர் மறைத்துவிட்டார் என்று குற்ப்பத்திரிகையில் அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது. இதன் பிறகு சாதிக் பாட்சா மரணம் அடைந்தார். பிறகு அமலாக்கத்துறை இந்த விவகாரத்தை கிடப்பில் போட்டுள்ளது. இந்த நிலையில் மறுபடியும் இந்த விவகாரத்தை தூசி தட்டி மு.க.ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க அமலாக்கத்துறை முடிவெடுத்துள்ளதாக கூறுகிறார்கள்.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து ஆ.ராசா, கனிமொழி என குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். ஆனால் அமலாக்கத்துறை நிதி மோசடி என்று பதிவு செய்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் கடந்த 2011ம் ஆண்டு சாதிக் பாட்சா அளித்த வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு ஸ்டாலினை விசாரிக்க முகாந்திரம் இருப்பதாக அமலாக்கத்துறை நினைக்கிறது. எனவே விரைவில் ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்பப்படலாம்.

அதே சமயம் தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மு.க.ஸ்டாலின் பெயரை இழுத்துவிடுவது திமுகவின் இமேஜை டேமேஜ் ஆக்கும் முயற்சியாக மத்திய பாஜக அரசு அமலாக்கத்துறையை பயன்படுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது.

click me!