
முதல்வர் எடப்பாடி தலைமையில் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அமைச்சர்களுக்கும், மாவட்ட செயலாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
முதல்வர் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் அணியினர் இணைவது குறித்து ஆலோசனை நடத்த 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு 5 நாட்களுக்கு மேல் ஆகிறது. ஆனால், இந்த குழுவினர் சந்தித்து பேசுவதில் தொடர்ந்து முட்டுக்கட்டை ஏற்பட்டு வருகிறது.
தங்களது நிபந்தனைகளை செய்து முடித்த பிறகுதான் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ஓ.பி.எஸ். அணியின் கே.பி.முனுசாமி கூறியுள்ளார். அதற்கு, இரு அணிகளும் இணைவதில் சுமுகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என வைத்திலிங்கம் கூறினார். ஆனாலும், இரு அணிகளும் இதுவரை பேசாமல் காலம் கடத்தி வருகின்றன.
இரு அணிகளும் இணைவது குறித்த பேச்சு வார்த்தை நடத்தப்படுகிறது என கூறப்பட்டாலும், மறைமுகமாக முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்கவே இரு தரப்பினரும் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், கடந்த 3 நாட்களாக அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்தது.
நேற்று வரை நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 50 மாவட்ட செயலாளர்களிடம் எடப்பாடி ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அமைச்சர்களுக்கும், மாவட்ட செயலாளர்களுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சிவகங்கை மாவட்ட செயலாளர் உமாதேவனுக்கும் எம்பி வைத்திலிங்கத்துக்கும் இடையே நீண்டநேரம் வாக்குவாதம் நடந்ததாக அதிமுக நிர்வாகிகள் கூறுகின்றனர்.
அமைச்சர்களில் பலர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக உள்ளனர். மாவட்ட செயலாளர்கள் சசிகலா, தினகரனை கட்சியில் இருந்து முழுவதுமாக நீக்கி விட்டு, புதிய பொதுச்செயலாளரை தேர்தல் மூலம் தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறார்கள். இதனால் எடப்பாடி அணியில் தற்போது உச்சக்கட்ட மோதல் எழுந்துள்ளது.
எடப்பாடி அணியை சேர்ந்த எஸ்சி-எஸ்டி பிரிவை சேர்ந்த 28 எம்எல்ஏக்கள் தனியாக ஆலோசனை நடத்தி, கட்சியிலும், ஆட்சியிலும் முக்கிய பதவிகளை தங்களுக்கு தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.