இந்திய மீனவர்கள் 26 பேர் கடும் எச்சரிக்கையுடன் விடுதலை! இதுவே கடைசியாக இருக்க வேண்டும் என மிரட்டல்.

By Ezhilarasan BabuFirst Published Jan 14, 2021, 11:30 AM IST
Highlights

இந்திய மீனவர்கள் 26 பேர் கடும் எச்சரிக்கையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இனிவரும் காலங்களில் எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டால் அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் கடும் சிறைத்தண்டனைத் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் இலங்கை நீதிமன்றம் எச்சரித்துள்ளது. 

இந்திய மீனவர்கள் 26 பேர் கடும் எச்சரிக்கையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இனிவரும் காலங்களில் எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டால் அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் கடும் சிறைத்தண்டனைத் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் இலங்கை நீதிமன்றம் எச்சரித்துள்ளது. தடுத்து வைக்கப்பட்டிருந்த 26 மீனவர்களையும் விடுதலை செய்து ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிபதி யூட்சன் உத்தரவிட்டுள்ளார். காரைநகர் கடற்படைத் தளத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 26 பேரும் கடற்படையினரால் படகுகளில் ஊர்காவற்றுறை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். 

எல்லை தாண்டிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டது, தடை செய்யப்பட்ட இழுவைமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டது ஆகிய குற்றச்சாட்டுக்கள் குறித்த மீனவர்களுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டது. இந்நிலையில், வழக்கின் தீவிரத்தை இந்திய மீனவர்கள் தரப்பு புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, நீதிபதி நேரடியாகவே மீனவர்களிடம் விசாரணை மேற்கொண்டார். விசாரணையின் முடிவில், மீனவர்கள் பயணித்த நான்கு படகுகள், மீன்களின் ஒலியை கண்டறிய பயன்படுத்தப்படும் எக்கோ இயந்திரம், தொலைபேசிகள், மீன்பிடி வலைகள் உட்பட்ட அனைத்துப் பொருட்களும் அரசுடைமை ஆக்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார். மீண்டும் இக்குறிப்பிட்ட மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டால்,  உடனடியாக அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனை வழங்கப்படும் என்று எச்சரித்து விடுதலை செய்தார். 

அதேபோல் இதுவே முதலும் கடையுமாக இருக்க வேண்டும் என நீதிபதி எச்சரித்தார்.  இந்த எச்சரிக்கையை மீறி உள்நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டால் அவர்கள் அனைவருக்கும் இரண்டு ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனைத் தீர்ப்பு வழங்கப்படும் என்றும், அவர்களின் பொருட்கள் அனைத்தும் அரசுடைமையாக்கப்படும் என்றும் எச்சரித்து விடுதலை செய்தார். குறித்த வழக்கின் போது நீரியல் அமைச்சகத்தில் அதிகாரிகளும் ஆஜராயினர். கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் காரைநகர் கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டு இரண்டு தடவைகள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களுக்கு தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

click me!