100 ஆண்டுகளுக்கு பிறகு ஜனவரியில் அடைமழை.. 35 ஆயிரம் ஹெக்டர் நெற்பயிர் சேதம். சோகத்தில் நாகை மாவட்டம்.

By Ezhilarasan BabuFirst Published Jan 14, 2021, 10:52 AM IST
Highlights

100 ஆண்டுகளுக்கு பிறகு  ஜனவரியில் பெய்யும் அடை மழையால் காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 3 லட்சம் ஹெக்டர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி விவசாயிகளை பொங்கல் நேரத்தில் சோகத்தில் ஆழ்த்தியிருக்கின்றன

100 ஆண்டுகளுக்கு பிறகு  ஜனவரியில் பெய்யும் அடை மழையால் காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 3 லட்சம் ஹெக்டர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி விவசாயிகளை பொங்கல் நேரத்தில் சோகத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. நாகை தொகுதியில் மட்டும் சுமார் 20 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் பாதிப்படைந்துள்ளன.நேற்று நாகை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி அவர்கள் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு மோட்டார் சைக்கிளிலேயே சென்று ஆய்வு மேற்கொண்டார். 

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்க தலைவர் திரு. காவிரி தனபாலன் அவர்களுடன் பல கிராமங்களுக்கு சென்று விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்சாரி, பொங்கல் நேரத்தில் அறுவடைக்கு தயார் நிலையிலிருந்த நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் கிராமங்கள் எங்கும் சோகம் நிலவுகிறது. நாகை தொகுதியில் மட்டும் 15  ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மாவட்டம் முழுக்க 35 ஆயிரம் ஹெக்டருக்கு அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. 90 முதல் 100 சதவீத அளவில் பாதிப்பு உள்ளதால் வைக்கோல் கூட தேறாத நிலை உள்ளது. 

தண்ணீரில் மூழ்கிய பயிர்கள் முளை விட்டுள்ளதை பார்க்க வேதனையாக உள்ளது. எனவே விளைச்சல் அடிப்படையில் இல்லாமல் பாதிப்பின் அடிப்படையில் நஷ்ட ஈடு கிடைக்க இன்சூரன்ஸ் நிறுவனங்களை அரசு வலியுறுத்த வேண்டும். மத்திய அரசு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து முழு நிவாரணத்தை வழங்கி தமிழக அரசுக்கு நிதி ஒதுக்க வேண்டும். தமிழக அரசு 100 சதவீத பாதிப்பை கவனத்தில் கொண்டு விவசாயிகளுக்கு உதவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.நாகை ஒன்றியத்தில் பாலையூர், திருமருகல் ஒன்றியத்தில் பனங்குடி, முட்டம், மரைக்கான் சாவடி, திட்டச்சேரி, திருமருகல், திருச்செட்டாங்குடி, திருக்கண்ணபுரம், தென்னமரக்குடி, பெருநாட்டன் தோப்பு, காக்க மங்கலம், கோட்டூர் ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன இந்நிலையில் அப்பகுதி விவசாயிகளை சந்தித்து அன்சாரி ஆறுதல் கூறினார். இது குறித்து சட்டமன்றத்தில் விரிவாக பேசுவதாகவும் அவர் கூறினார்.

 

click me!