
அவிநாசி- அத்திக்கடவு திட்டத்துக்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு
2017-18ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டில், கோவை, ஈரோடு, திருப்பூர் என மூன்று மாவட்ட மக்களின் 60 ஆண்டுக்கால மிக முக்கியக் கோரிக்கையாக அவிநாசி அத்திக்கடவு குடிநீர் திட்டத்துக்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு தனது முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தது. நிதி அமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் பின்வருவன.
அதில், கோவை, ஈரோடு, திருப்பூர் என மூன்று மாவட்ட மக்களின் 60 ஆண்டுக்கால மிக முக்கியக் கோரிக்கையாக விளங்குகிறது அவிநாசி - அத்திக்கடவு திட்டம். மூன்று மாவட்ட மக்கள், 72 குளங்கள், 300-க்கும் மேற்பட்ட கிராமங்களின் நீர் ஆதாரத்துக்கான திட்டமாக இது விளங்குகிறது. 1800 அடிக்கும் கீழ் சென்று நிலத்தடி நீர் கிடைக்காத காரணத்தால், நிலத்தடி நீரை செறிவூட்டும் அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. இந்த திட்டத்துக்கு முதல் கட்டமாக ரூ. 3 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இந்த திட்டத்தை விரைவுபடுத்தக்கோரி திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்ட மக்கள் கடந்த மாதம் போராட்டமும், உண்ணாவிரதமும் இருந்தனர். இதையடுத்து, அவிநாசி-அத்திக்கடவு திட்டத்துக்கு நிதியாண்டு பட்ஜெட்டில் ரூ. 250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.