'234 எம்.எல்.ஏக்களையும் கடத்துவோம்'..! காவல்துறையை மிரட்டிய ‘அல் ஹக்‘ அமைப்பு..!

By Manikandan S R SFirst Published Mar 3, 2020, 1:10 PM IST
Highlights

நாங்கள் 250 பேர் ஒரு இயக்கமாக செயல்படுகிறோம். குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை நடைமுறைப்படுத்த கூடாது. அவ்வாறு ஏப்ரல் 1-ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தினால் எங்கள் இயக்கத்தில் உள்ள 250 பேரும் சேர்ந்து தமிழகத்தில் உள்ள 234 எம்.எல்.ஏ.க்களை கடத்துவோம்.

அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் அதனால் அதை அமல்படுத்த கூடாது எனவும் பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகிறது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்து 48 பேர் பலியாகினர். இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலும் இஸ்லாமிய அமைப்புகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த மாதம் 14 ம் தேதி முதல் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் இன்று 19 வது நாளாக தொடர்கிறது. போராட்டம் நடத்தியவர்களுடன் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தியும் அதில் உடன்பாடு எட்டப்படாமல் போராட்டம் தொடர்கிறது. இந்தநிலையில் சென்னை வண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டருக்கு ‘அல் ஹக்‘ என்ற புதிய அமைப்பின் பெயரில் மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது.

அதில்," நாங்கள் 250 பேர் ஒரு இயக்கமாக செயல்படுகிறோம். குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை நடைமுறைப்படுத்த கூடாது. அவ்வாறு ஏப்ரல் 1-ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தினால் எங்கள் இயக்கத்தில் உள்ள 250 பேரும் சேர்ந்து தமிழகத்தில் உள்ள 234 எம்.எல்.ஏ.க்களை கடத்துவோம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இக்கடிதம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. கடிதம் எங்கிருந்து வந்தது என காவல்துறை தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது.

click me!