2015 சென்னை வெள்ளம் Vs 2021 பெரு மழை... ஜெயலலிதாவை ஓவர்டேக் செய்த மு.க.ஸ்டாலின்..!

By Asianet TamilFirst Published Nov 7, 2021, 4:40 PM IST
Highlights

சென்னை பெரிய வெள்ளச் சேதத்தைச் சந்திக்க செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்புதான் முக்கிய காரணமானது. ஏரியைத் திறக்க அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை பொதுப்பணித் துறை அதிகாரிகளால் அணுக முடியவில்லை என்ற விமர்சனமும் எழுந்தது.

சென்னையில் ஆறு ஆண்டுகள் கழித்து பெரு மழை பெய்துவரும் நிலையில் 2015-ஆம் ஆண்டில் வந்த வெள்ளத்தையும் தற்போது பெய்யும் பெரு மழையையும் பார்ப்போம். 

2015, டிசம்பர் 1. மதியம் 1 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியபோது, அடுத்த நான்கு நாட்களுக்கு வாழ்க்கை முடங்கிபோகும் என்று சென்னைவாசிகள் யாரும் எதிர்பார்க்கவில்லை. ‘கிளவுட் பஸ்ர்ட்’ என்று சொல்லுமளவுக்கு மேகத்தைக் கிழித்துக்கொண்டு சென்னையில் மழைக் கொட்டத் தொடங்கியது. அதற்கு முன்பே நவம்பர் மாதத்திலும் சென்னையில் மழை பெய்திருந்த நிலையில், ஏற்கெனவே நீர் நிலைகள் நிரம்பிக் கிடந்தன. மேலும் லண்டன் வானிலை மையம் சென்னையில் டிசம்பர் 1 அன்று 50 செ.மீ. மழை பெய்யும் என்று எச்சரித்திருந்தது. 

ஆனால், அவ்வளவு பெரிய மாமழை பெய்யும் என்பதை யாரும் காதில் ஏற்றிக்கொள்ளவில்லை. விளைவு, எல்லோரும் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தனர். ஆனால், மதியத்துக்கு மேல் பெய்யத் தொடங்கிய மழை இடைவெளி விடாமல் கொட்டியபோதுதான் சென்னை இக்கட்டை நோக்கிச் சென்றுக்கொண்டிருக்கிறதை என்பதை மக்கள் உணர் ஆரம்பித்தனர். என்றாலும் மழை நின்றுவிடும் என்ற நம்பிக்கையில் அன்றைய தினம் இரவில் சென்னைவாசிகள் உறங்கச்சென்றனர். ஆனால், ஏற்கெனவே நிரம்பி ததும்பிக்கொண்டிருந்த செம்பரம்பாக்கம் ஏரியில், அன்றைய தினமும் பெய்த மழையும் சேர்ந்ததால், வலிய ஆரம்பித்தது. நீர்த்தேக்கத்தைப் பாதுகாக்க இரவில் அப்படியே பொதுப்பணித் துறையினர் திறந்துவிட்டார்கள்.

பகலில் என்றாலும் மக்கள் எச்சரிக்கையாக இருந்திருப்பார்கள். ஆனால், இரவு நேரம் என்பதாலும் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மின் சப்ளை துண்டிக்கப்பட்டதாலும் மொபைல் டவர்கள் சேதமடைந்ததாலும் ஏற்கெனவே சென்னை நகரம் தனி தீவாக மாறியிருந்தது. ஒரு பக்கம் கொட்டும் மழை நீர், இன்னொரு பக்கம் செம்பரமாக்கம் ஏரி நீர் என இரண்டும் கைகோர்க்க, சென்னை நகரம் வரலாற்றில் இல்லாத பெரும் வெள்ளத்தைச் சந்திக்க நேர்ந்தது. அதன்பிறகு 4 நாட்களுக்கு சென்னை நகரையும் மக்களையும் கைத்தூக்கிவிட ஒட்டுமொத்த தமிழகமும் கைகோர்த்தது எல்லாம் வரலாறு.

சென்னை பெரிய வெள்ளச் சேதத்தைச் சந்திக்க செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்புதான் முக்கிய காரணமானது. ஏரியைத் திறக்க அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை பொதுப்பணித் துறை அதிகாரிகளால் அணுக முடியவில்லை என்ற விமர்சனமும் எழுந்தது. 2015 டிசம்பர் 1 அன்று சென்னையில் மழை பெய்தபோது ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் செய்வதறியாமல் ஸ்தம்பித்து கிடந்தது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. மழை வெள்ள நேரத்திலும் முதல்வர் ஜெயலலிதாவைக் களத்தில் பார்க்க முடியவில்லை. ஆனால், 2015 அளவுக்கு (அப்போது 49 செ.மீ. மழை) இல்லாவிட்டாலும் அதில் பாதியளவுக்கு தற்போது மழை பெய்துள்ளது. 

காலை முதலே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகள் என அரசு நிர்வாகம் களம் இறங்கியிருப்பதைக் காண முடிகிறது. போர்க்கால நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளது. அடுத்த இரு நாட்களுக்கும், 10, 11 ஆகிய தேதிகளில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் இப்போதே திறக்கப்பட்டிருக்கிறது. எப்போதும், மனிதர்களுக்கு அனுபவம் தரும் பாடத்துக்கு நிகர் ஏதுமில்லை. 2015 சென்னை வெள்ளம் அரசு நிர்வாகத்துக்கு மறக்க முடியாத பாடத்தைக் கொடுத்தது. அதை முறையாகப் படித்தார்களா, இல்லையா என்பது போகப் போகத் தெரியும்! 

click me!