தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேருக்கும் கெடு ….இந்த தேதிக்குள்ள மேல்முறையீடு செய்யணும்…ஓ.பி.ராவத் அதிரடி…

By Selvanayagam PFirst Published Oct 27, 2018, 6:19 AM IST
Highlights

தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யவில்லை என்றால் அந்த கொகுதிகளுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதிக்குள் இடைத் தேர்தல் நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் அதிரடியாக அறிவித்துள்ளார்.

 

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்த சபாநாயகர் ப.தனபால் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில்  அவர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி தீர்ப்பு கூறப்பட்டது. அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் மற்றொரு நீதிபதி சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். தகுதி நீக்கம் செல்லும் என்று இந்திரா பானர்ஜியும், செல்லாது என்று சுந்தரும் தீர்ப்பு கூறி இருந்தனர்.

தீர்ப்பு மாறுபட்டதாக இருந்ததால் இந்த வழக்கு 3-வது நீதிபதியின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. 3-வது நீதிபதியாக நியமிக்கப்பட்ட சத்தியநாராயணன் இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு கூறினார். 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு கூறிய அவர், அந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு இருந்த தடையையும் நீக்கினார்.



இந்த தீர்ப்பை எதிர்த்து 18 பேர் தரப்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் மேல்முறையீடு செய்யாவிட்டால் 6 மாதங்களுக்குள் அந்த 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தியாக வேண்டும்.

இடைத்தேர்தல் நடத்துவதாக இருந்தால் எப்போது நடத்த வாய்ப்பு இருக்கிறது? என்பது பற்றி டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் செய்தியாளார்களிடம் பேசினார்.

அப்போது 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம்  வழங்கிய தீர்ப்பின் நகல் எங்களுக்கு கிடைத்து இருக்கிறது.. இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் காலஅவகாசம் உள்ளது. அதுவரை நாங்கள் காத்து இருப்போம். 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யப்படவில்லை என்றால், உடனடியாக இடைத்தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தொடங்குவோம்.

18 தொகுதிகளும் ஓர் ஆண்டுக்கும் மேலாக காலியாக இருப்பதை சுட்டிக்காட்டி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி எங்களுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்.

ஏற்கனவே திருப்பரங்குன்றம், திருவாரூர் சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த 2 தொகுதிகளுக்கும் வருகிற ஜனவரி மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தியாக வேண்டும். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யப்படாவிட்டால், இந்த 2 தொகுதிகளுடன் சேர்த்து மொத்தம் காலியாக உள்ள 20 சட்டசபை தொகுதிகளுக்கும் ஜனவரி மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இருக்கிறது என்று ஓ.பி.ராவத் கூறினார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் தங்கள் தொகுதிகளில் மீண்டும் போட்டியிடலாம் என்றும் ஓ.பி.ராவத் தெரிவித்தார்.

இதனிடையே தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் விரைவில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளதாக டி.டி.வி.தினகரன் தரப்பில் கூறிப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து எதிர்த்து சபாநாயகர் தனபால் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது..

click me!