ஸ்கூட்டரில் எடுத்துச் செல்லப்பட்ட விவிபேட் இயந்திரத்தில் 15 வாக்குகள்.. வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு?

By vinoth kumarFirst Published Apr 9, 2021, 1:39 PM IST
Highlights

வேளச்சேரியில் ஸ்கூட்டரில் எடுத்துச் செல்லப்பட்ட விவிபேட் இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகி இருந்தன என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார். 

வேளச்சேரியில் ஸ்கூட்டரில் எடுத்துச் செல்லப்பட்ட விவிபேட் இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகி இருந்தன என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார். 

தமிழகத்தில் கடந்த 6-ம் தேதி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை முதல் மாலை வரை மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றினர். சென்னை வேளச்சேரியில் வாக்குப்பதிவு நாள் அன்று 2 வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்ட பெட்டிகள் உள்ளிட்ட 4 பெட்டிகளை, இருவர் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. முறைப்படி அரசு வாகனத்தில் அதிகாரிகள் அனுமதியுடன் எடுத்துச் செல்லவில்லை என கடும் புகார்கள் எழுந்தது. 

இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனிடையே இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட இயந்திரத்தில் வாக்குகள் எதுவும் பதிவாகவில்லை என்ற தகவல் வெளியானது. இந்நிலையில், வேளச்சேரியில் ஸ்கூட்டரில் எடுத்துச் செல்லப்பட்ட விவிபேட் இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகி இருந்துள்ளது. 

இதுதொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- வேளச்சேரியில் ஸ்கூட்டரில் எடுத்துச் செல்லப்பட்ட விவிபேட் இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகி இருந்தன. ஸ்கூட்டரில் எடுத்துச்சென்ற விவிபேட் இயந்திரம் 50 நிமிடங்கள் வாக்குப்பதிவுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. 50 நிமிடங்கள் பயன்படுத்தப்பட்ட பின்னர் விவிபேட் இயந்திரம் பழுதாகியுள்ளது. பின்னர், அந்த இயந்திரத்தை பயன்படுத்தவில்லை.

மேலும், ஸ்கூட்டரில் விவிபேட் இயந்திரத்தை எடுத்துச் சென்றது விதி மீறல் எனவும் தெரிவித்துள்ளார். ஸ்கூட்டரில் எடுத்துச் சென்ற 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்படாதவை. இந்த விவகாரம் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு குறித்து தலைமைத் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும். வாக்காளர் எந்த கட்சிக்கு வாக்களித்தார் என்பதை உறுதி செய்ய விவிபேட் இயந்திரம் பயன்படுத்தப்படும் என சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 

click me!