
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து 5 நாட்களுக்குப் பிறகு தூத்துக்குடியில் போடப்பட்டிருந்த 144 தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி ‘ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு’ சார்பில் கடந்த 22-ந்தேதி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் கலவரம் வெடித்ததால் போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியானார்கள். ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர்.
தூத்துக்குடி மாநகர பகுதியில் ஆங்காங்கே பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களும் நடந்தன. இதன் காரணமாக தூத்துக்குடியில் கடந்த 4 நாட்களாக பஸ்கள் இயங்காததாலும், கடைகள் திறக்கப்படாததாலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் தூத்துக்குடியில் ஒருசில பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. சில இடங்களில் மட்டும் கடைகள் திறக்கப்பட்டன.
இந்த நிலையில் 5-வது நாளான நேற்று காலை தூத்துக்குடியில் இருந்து நெல்லை, திருச்செந்தூர், மதுரை, கோவை உள்ளிட்ட வெளியூர்களுக்கு பஸ் போக்குவரத்து தொடங்கியது. நகர்ப்புறத்தில் ஒரு சில இடங்களை தவிர மற்ற பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் பஸ்களில் பயணிகளின் கூட்டம் சற்று அதிகமாகவே காணப்பட்டது.
மேலும் ஆட்டோக்கள், கார்கள், வேன்கள் வழக்கம்போல் ஓடின. தூத்துக்குடியில் உள்ள அனைத்து கடைகளும் நேற்று திறக்கப்பட்டு இருந்தன. மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர்.கடந்த 5 நாட்களுக்கு பிறகு தூத்துக்குடியில் நேற்று முழு அமைதி திரும்பியதால், மக்கள் நிம்மதி அடைந்தனர்.
இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி நள்ளிரவு முதல் தூத்துக்குடியில் போடப்பட்ட 144 தடை உத்தரவு இன்று காலை 8 மணி முதல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதையடுத்து தூத்துக்குடி இன்று காலை முதல் இயல்பு நிலைக்கு திரும்பியது. பதற்றம் தணிந்துள்ளதால் மக்கள் சற்று நிம்மதிப் பெருமூச்சு விடத் தொடங்கியுள்ளனர்.