12 எதிர்க்கட்சி ராஜ்யசபா எம்.பி.க்கள் சஸ்பெண்ட்… மாநிலங்களவை தலைவர் அதிரடி!!

By Narendran SFirst Published Nov 29, 2021, 4:41 PM IST
Highlights

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கண்ணிய குறைவாக நடந்து கொண்டதாக 12 எதிர்க்கட்சி ராஜ்யசபா எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கண்ணிய குறைவாக நடந்து கொண்டதாக 12 எதிர்க்கட்சி ராஜ்யசபா எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது. இதற்கு பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து டெல்லி எல்லை பகுதிகளில் விவசாயிகள் முற்றுகையிட்டு கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி போராட்டத்தை தொடங்கினர். ஓராண்டுக்கு மேலாக அவர்கள் போராடி வந்த நிலையில்  கடந்த 19 ஆம் தேதி மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். இதற்கான மசோதா, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டத்தை தொடர விவசாயிகள் முடிவு செய்திருந்தனர். இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.

டிசம்பர் 23 ஆம் தேதி வரை இத்தொடர் நடைபெற உள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளுடன் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் ஒரே நேரத்தில் நடைபெற்றன. இந்த கூட்டத்தொடரின் முதல் நாளில் வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா தாக்கல் செய்யப்படும் என்று மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஏற்கனவே அறிவித்திருந்ததை அடுத்து நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தும் முடிவை விவசாயிகள் ஒத்தி வைத்தனர். இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. முதல் நாளான இன்று இரு அவைகளிலும் 3 வேளாண் சட்டங்கள் ரத்து செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையே அவை கூடியபோது, மாநிலங்களவையில் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அறிவிப்பை மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார். அதன்படி, கடந்த  ஆகஸ்ட் 11 ஆம் தேதி அன்று ராஜ்யசபாவில் நடந்த விவாதத்தின் போது, இந்த எம்.பி.க்கள் சபாநாயகரை அவமதித்ததாகவும், அவையின் அலுவல்களுக்கு இடையூறு விளைவித்ததாகவும் கூறி காங்கிரஸைச் சேர்ந்த ஆறு பேர், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சிவசேனாவைச் சேர்ந்த தலா இருவர், சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகியவற்றிலிருந்து தலா ஒருவர் உட்பட 12 எதிர்க்கட்சி ராஜ்யசபா எம்.பி.க்கள் முழு அமர்விற்கும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போது எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் செய்தனர். இதனால், கூச்சல் குழப்பம் ஏற்பட்டு நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் நடத்த முடியாமல் போய்விட்டது. இதுதொடர்பாக மத்திய அரசு இந்த எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தது. அதன்படி, ராஜ்யசபாவில் உள்ள 12 எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

click me!