ஆளும் கட்சிக்கு கூண்டோடு தாவும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் !! அதிர்ச்சியில் ராகுல் காந்தி !!

By Selvanayagam PFirst Published Jun 6, 2019, 11:05 PM IST
Highlights

தெலங்கானாவில் உள்ள 18 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 12 பேர் ஆளும்  தெலங்கானா ராஷ்டிரிய சமிதியில் இணைய முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக  சபாநாயகரை சந்தித்து அவர்கள் 12 பேரும் அனுமதி பெற்றுள்ளனர்.

தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ், தனது  அரசின் பதவிக்காலம் முடிய 9 மாதங்கள் இருந்த நிலையில், ஆட்சியை கலைத்து, தேர்தலை சந்திக்க முன்வந்தார். 

அம்மாநிலத்தில் சந்திரசேகர ராவுக்கு போட்டியாக முன்னாள் ஆந்திர முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான  சந்திரபாபு நாயுடு மெகா கூட்டணி அமைத்தார். தெலுங்கு தேசம், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் ஓரணியில் இணைந்தன. பாஜக தனித்து போட்டியிட்டது. 

மும்முனை  போட்டியால், தெலங்கானாவில் கடும் இழுபறி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.  தொடர்ந்து கடந்த வருடம் டிசம்பர் மாதம் 7-ம் தேதி, தெலுங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிஜோரம், .சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. 

119 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட தெலங்கானாவில் ஆட்சி அமைக்க 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி 88 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கூட்டணி 20  இடங்களிலும், பாஜ 2  இடங்களிலும் மற்றும் மற்றவர்கள் 6 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.

இதையடுத்து கடந்த மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தெலங்கானாவில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் அம்மாநிலத்தில் உள்ள உள்ள 18 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 12பேர் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியில் இணைய முடிவு செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து  டி.ஆர்.எஸ்-சில் இணைத்துக் கொள்ளுமாறு 12 காங்கிரஸ் எம்எல்ஏக்கள்  சபாநாயகரை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். அவர்கள் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட சபாநாயகர் அவர்கள் 12 பேரும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் இணைய அனுமதி வழங்கினார்.

ஒரு கட்சியின் எம்எல்ஏக்களோ, எம்பிக்களோ மூன்றில் ஒரு பகுதியினர் ஒட்டு மொத்தமாக மாற்றுக் கட்சிக்கு சென்றால் அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயாது என்பதால் அந்த 12 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொடர்ந்து பதவியில் நீடிப்பார்கள்.

தெலங்கானாவில் 12 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஒட்டு மொத்தமாக தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் சேர்ந்ததால் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

click me!