
எடப்பாடி அரசுக்கு எதிராக முன்னாள் சுற்றுசூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தலைமையில் 11எம்.எல்.ஏக்களின் ரகசிய ஆலோசனை கூட்டத்தால் அதிமுகவில் சலசலப்பு நிலவுகிறது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது இவர் சுற்று சூழல் துறை அமைச்சராகவும், ஈரோடு புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும் இருந்தார்.
கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கபட்டிருந்தபோது இவரும் தங்கி இருந்தார்.
தோப்பு வெங்கடாசலத்தின் அரசியல் எதிரியான செங்கோட்டையனுக்கு அவைத்தலைவர் பதவி கொடுக்கப்பட்டது அதிருப்தியை ஏற்படுத்தியது.
அங்கு சசிகலா ஆதரவு அமைச்சர்களுக்கும் இவருக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் நடைபெற்றதாக தெரிகிறது.
இதையடுத்து அமைச்சர்கள் நடத்திய ஆய்வு கூட்டத்திலும் இவர் பங்கேற்கவில்லை. பின்னர், நடைபெற்ற ஆட்சி மன்ற குழுவிலும் இவர் பங்கேற்காதது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்ற கல்லூரி நிகழ்ச்சியை புறக்கணித்து விட்டு எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் வேறு ஒரு நிகழ்ச்சிக்கு சென்றதால் செங்கோட்டையன், தங்கமணி, உள்ளிட்ட அமைச்சர்கள் செம கடுப்பில் இருந்தனர்.
இந்நிலையில், தோப்பு வெங்கடாசலம் தலைமையில் 11 எம்.எல்.ஏக்களின் ரகசிய ஆலோசனை கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் நடைபெற்று வருகிறது.
இதில், கூவத்தூரில் கொடுத்த வாக்குறுதியை எடப்பாடி அரசு நிறைவேற்றவில்லை என எம்.எல்.ஏக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் எம்.எல்.ஏக்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
அதிருப்தி எம்.எல்.ஏக்களின் இந்த ஆலோசனை கூட்டத்தால் எடப்பாடி அரசுக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது என்பதில் சந்தேகமில்லை.